தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க கூடுதல் நேரம்.. கூடுதலாக 25,000 வாக்குச்சாவடி..!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தும் தேதியை தீர்மானிப்பது மற்றும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னை வந்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் அவர்கள் இரண்டாவது நாளாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளை அழைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடைபெறும் பணபரிவர்த்தனை குறித்து பட்டியல் எடுத்து அதை வருமான வரித்துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூட்டம் முடிந்ததும் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உள்துறை செயலாளர், உளவு பிரிவு ஐ.ஜி., கடலோர காவல் படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனில் அரோரா, தற்போதைய தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ந்தேதியுடன் முடிவடைகிறது என்றார். இதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் எப்போதும் போல் வரும் தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்ப்பதாகவும்,புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும், வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்ற அவர், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்றார்.
கொரோனா காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள 68,000 வாக்குச்சாவடிகளுடன் சேர்த்து கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும், திருவிழாக்கள், மாணவர்களுக்கான தேர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என்றும் சுனில் அரோரா தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுமென அவர் கூறினார்.
Comments