அப்பாவிகள்தான் இலக்கு... அடுத்தவருக்கு உதவி செய்ய காத்திருந்த ஏ.டி.எம் மைய திருடர்கள் சுற்றி வளைப்பு!
தமிழகம் முழுவதும் ஏடிஎம்-யில் பணம் எடுத்து தருவதாக கூறி அப்பாவிகளின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்த மோசடி செய்த 3 போரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் அன்னபுஷ்பம் மற்றும் நாகராஜ் ஆகியோர் விருதுநகர் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்- மையத்தில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது , ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு உதவி செய்வதாக கூறிய நபர் ஒருவர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, அதே வண்ணத்தில் இருக்கும் மற்றோரு ஏ.டி.எம் கார்டை மாற்றி அவர்களிடத்திரல் கொடுத்துள்ளார். அவர்கள் சென்ற பிறகு, ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி இருவரின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ-57,600 எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட இருவரும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே போல், மதுரை, சமயநல்லூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி போன்ற பல இடங்களிலும் மோசடி நடந்ததாக புகார் வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஏ.டி.எம். மோசடி தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எம் மையங்களில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது பணத்தை எடுத்து கொடுத்து விட்டு ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்த ஏ.டி.எம் கார்டுகளை கொண்டு பணத்தை எடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இப்படி, அப்பாவிகளிடத்தில் மோசடியில் ஈடுபட்டவன் தேனி மாவட்டம் சக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த தம்பிராஜ் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து , போலீஸார் தம்பிராஜை தேடி வந்தனர். திருமங்கலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏ.டி.எம். மையத்தில் அடுத்தவருக்கு உதவி செய்ய நின்று கொண்டிருந்த தம்பிராஜை திருமங்கலம் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் சுபகிருது என்கிற சிவா மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், தம்பிராஜின் கூட்டாளிகள் இருவரையும் போலீஸார் அதிரடியாக பிடித்தனர். மோசடிப்பேர்வழிகள் மூன்று பேரிடத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இதே போன்று ஏ.டி.எம் மையங்களில் உதவுவது போல நடித்து பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது. கைதானவர்களிடத்தில் இருந்து 50க்கு மேற்பட்ட ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ 1.50 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது.
இது குறித்து போலீஸார் கூறுகையில்,' ஏ.டி.எம் கார்டுகளை தயவு செய்து அடுத்தவரிடத்தில் கொடுத்து பணம் எடுத்து தர சொல்லாதீர்கள். உங்கள் உறவுக்காரர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களை உடன் அழைத்து சென்று முதியவர்கள் பணம் எடுப்பது நல்லது 'என்கின்றனர்.
Comments