கோவை : குருமாவுக்காக நடந்த கொலை!

0 62205

கோவை அருகே வாங்கிய புரோட்டாவுக்கு குருமா அதிகமாக கொடுக்க சொல்லி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை  மாவட்டம் சூலூர் அருகேயுள்ள முத்து கவுண்டன் புதூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.செவ்வாய்க்கிழமை இரவு கரிகாலன் என்பருக்கு சொந்தமான உணவகத்தில் ஆரோக்கியராஜ் பரோட்டா வாங்கியுள்ளார். அப்பொழுது பரோட்டாவுக்கு கூடுதல் குருமா தருமாறு பணியாளர்களிடம் கேட்டுள்ளார். தினமும்  அதிக குருமா கேட்பதால் அவர்கள் தர மறுத்தனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஒருகட்டத்தில்  தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜை அவரது சாதிப் பெயரைச் சொல்லியே உணவக பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்  தாக்கியுள்ளனர். ஹோட்டல் புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, உரிமையாளர் கரிகாலன், அவரது நண்பர் முத்து ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ஆரோக்கியராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட  உணவக உரிமையாளர் கரிகாலன் உட்பட மூவரை சூலூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். தொடர்ந்து, ஆரோக்கிய ராஜின் உறவினர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கைதானவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments