நம்பிக்கையை விதைக்கும் சுவரோவியம்

0 3817
நம்பிக்கையை விதைக்கும் சுவரோவியம்

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் பறக்கும் ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ள மிக நீண்ட சுவர் ஓவியம் காண்போரை வசீகரிக்கிறது.

நாட்டின் மிகப் பெரிய சுவர் ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சுவரோவியம் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

ஓவியங்கள் எப்போதும் மனதுக்கு புத்துணர்வு அளிப்பவை. சென்னையின் முக்கிய சாலையொன்றில் வரையப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய ஓவியமும் அப்படி தான் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிப்பதுடன் காண்போரை மலைக்க வைக்கிறது. 

பழைய மாமல்லபுரம் சாலையில் இந்திரா நகர் ரயில் நிலையத்தின் சுமார் 280 மீட்டர் நீளம் கொண்ட சுவற்றில் பிரமாண்டமான முறையில் வரையப்பட்டுள்ளது இந்த பனோரமிக் வகை ஓவியம்.

சென்னையைச் சேர்ந்த கிராஃபிட்டி ரைட்டர் ஸ்ட்ரீட் ஆர்டிஸ்ட் ஏ-கில், டெல்லியைச் சேர்ந்த கத்ரா ஆகியோர் இணைந்து இந்தச் சுவரோவியத்தை வடிவமைத்துள்ளனர்.

நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் புன்னகையை தனது தூரிகையின் வழி சுவற்றில் தூவியிருக்கிறார், உருவப்படம் எனப்படும் போர்ட்ரெய்ட் ஓவியங்களுக்கு புகழ்பெற்ற ஓவியர் ஏ- கில். 

புன்னகை மாறாத வெவ்வேறு முகங்களை வைத்து வரையப்பட்டுள்ள இந்த சுவரோவியங்களுக்கு "நாம்" என
பெயரிடப்பட்டுள்ளது.

இந்தச் சுவரோவியம், எச்.ஐ.வி. நோய் குறித்த மூடநம்பிக்கைகளையும், தவறான எண்ணங்களையும் உடைத்தெறிக்கும் முயற்சியாக வரையப்பட்டுள்ளது என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமூகம் புறக்கணிப்பதை நிறுத்தி, சுவரோவியத்தின் மூலம் மனிதத்தைப் பரப்பும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஸ்டார்ட் இந்தியா பவுண்டேசன், டைடல் பார்க் மற்றும் தெற்கு ரயில்வே ஆகியவை பங்களித்துள்ளன.

இந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ள மூன்று பேரின் முகங்கள் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடையது. அவர்களின் அனுமதி பெற்று எச்ஐவி இல்லாத மனிதர்களின் முகங்களோடு கலந்துள்ளது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல, சமூகத்தில் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்ட எல்லா மனிதர்களும் சமம் தான் என்பதை உணர்த்தும் இந்த சுவரோவியங்கள் நம்பிக்கையை விதைக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments