அரசு வேலை கிடைக்கல ...மெரினா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன்!

0 15292

தனக்கு அரசு வேலை வழங்கா விட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்று காவல்துறை டிஜிபி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் அளித்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மெரீனா காமராஜர் சாலையில் காவல்துறை டிஜிபி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மயிலாப்பூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நுழைவாயில் வழியாக பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை கொடுத்து வருவது வழக்கம். ஆனால் காவல்துறை அதிகாரிகளை சந்திக்க முன் அனுமதி பெற்றாலே பாதுகாப்பு பிரிவு போலீசார் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளியான பிராஷாந் என்பவர், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், "தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வழங்காவிட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன். அதற்கு காவல்துறை அனுமதி தரவேண்டும். அவ்வாறு ஈடுபடும் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பார்த்து அதிர்ந்து போன பாதுகாப்பு பிரிவு போலீசார், மாற்றுத்திறனாளியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த மணிகண்ட பிரசாத் என்பது தெரிய வந்தது. தனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டி, இவர் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் மனுக்கள் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை தனக்கு அரசு வேலை கிடைக்காததால், மனஉளைச்சலில் இருந்த மணிகண்ட பிரசாத் இது போன்ற மனுவை கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் அறிவுரை வழங்கி, இனிமேல் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கி, அனுப்பி வைத்தனர்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மற்றும் சென்னை இல்லத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளி ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை தகர்ப்பேன் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments