திருப்பூர் : தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான பரிதாபம்!
திருப்பூரில் தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு வந்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் - ஆர்த்தி தம்பதியினருக்கு 7 வயதில் பிரையன் மற்றும் 3வயதில் அனில் என்ற இருமகன்களும், 4வயதில் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் சந்தோஷ் வசித்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலையில் சந்தோஷ் உள்ளார். இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு தாமதாமாக வரும் சந்தோஷ் தன் குழந்தைகளுக்கு இரவில் ஃப்ரைடு ரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அதேபோல நேற்றும் பணி முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்த சந்தோஷ் , தான் எடுத்து வந்த ஃப்ரைடு ரைஸை தனது மூத்த மகன் ப்ரையன் மற்றும் மகள் பிரியங்காவுக்கு கொடுத்துள்ளார். இரவில் உறக்க கலக்கத்தில் உணவு சாப்பிட்டு விட்டு குழந்தைகள் படுத்துள்ளனர். காலையில் சிறுவன் ப்ரையன் உறக்கத்திலிருந்து எழாமல் அசைவின்றி கிடந்துள்ளான். இதைப் பார்த்து விட்டு சந்தோஷ் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். அங்கு, ப்ரையனை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மகனின் உடலை வீட்டுக்கு சோகத்துடன் வீட்டுக்கு கொண்டு வந்த நிலையில் , குழந்தை பிரியங்காவும் மயங்கி விழுந்து இறந்துள்ளது.
இரவு நேரத்தில் கொடுக்கப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஃபுட் பாய்சனாக மாறியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் கூறு ஆய்வுக்கு பிறகே உண்மை நிலை தெரிய வரும். இரு குழந்தைகளின் உடல்களைப் பார்த்து தம்பதி கண்ணீர் விட்டு அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Comments