நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு; மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பணி!- நெல்லை ஆட்சியர் காட்டிய அக்கறை

0 23227
நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவின் மகளிடத்தில் காசோலை வழங்கு ஆட்சியர் விஷ்ணு

'பரியேறும் பெருமாள் ' படத்தில் நடிகர் கதிருக்கு தந்தையாக நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்க உத்தரவிட்டுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் அவரின் மகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணி வழங்கியுள்ளார்.

'பரியேறும் பெருமாள்'  படத்தில் பரியனாக நடித்த கதிருக்கு தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. பல ஆண்டுகளாக பெண் வேடம் கட்டி நாட்டுப்புற கலைகளை வளர்த்து வரும் தங்கராசு நெல்லை வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார். சமீபத்தில், நெல்லையில் பெய்த கனமழையில் அவரின் வீடு இடித்து போனது. இதனால், குடிசை வீட்டில் மின்சார வசதி கூட இல்லாத நிலையில் தங்கராசுவின் குடும்பம் வசித்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வழங்கப்படும் கலைச்சுடர் விருதுக்கு நாட்டுப்புற கலைஞர் தங்கராசு தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான தகவலை அவரிடத்தில் சொல்ல தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணை செயலாளர் நாறும்பூ நாதன் தங்கராசுவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அப்போதுதான், தங்கராசுவின் கஷ்டஜீவனம் குறித்து  வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து , தங்கராசுவின் நிலை குறித்து நாறும்பூ நாதன் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்துக்கு கொண்டு சென்றார். மேலும், மீடியாக்களிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, நாட்டுப்புற கலைஞர் தங்கராசு மற்றும் அவரின் குடும்பத்தினரை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேற்று நேரில் அழைத்தார். பின்பு, நெல்லை ரெட்டியார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்க உத்தவிட்டார். ஆசிரியை பணிக்கு படித்துள்ள தங்கராசுவின் மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ரூ.10, 000 சம்பளத்தில் பணி வழங்கவும் ஏற்பாடு செய்தார். நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர் என்ற வகையில் தங்கராசுவுக்கு மாதம் ரூ. 3,000 பென்சன் கிடைக்கவும் தமிழக கலை பண்பாட்டுத்துறைக்கு ஆட்சியர் விஷ்ணு பரிந்துரை செய்தார். அதோடு, தனிப்பட்ட நடவடிக்கை எடுத்து தங்கராசுவின் மகளுக்கு லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் வாங்குவதற்காக ரூ. 70,000 மதிப்புள்ள காசோலையையும் ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

இதனால்,மகிழ்ச்சியடைந்த தங்கராசுவின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவுக்கு மனதார நன்றி தெரிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நாறும்பூ நாதனிடத்தில் பேசிய போது, 'எங்கள் அமைப்பின் சார்பாகவும் தங்கராசுவுக்கு நிதி திரட்டி வருகிறோம். எங்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நெல்லை வரும் போது, அந்த நிதியை தங்கராசுவிடத்தில் ஒப்படைப்போம் 'என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments