உத்தரகாண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா ஆற்றில் பனிச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 197 பேரை காணவில்லை என்று வெள்ளப் பெருக்கு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமய மலையின் தபோவன் பகுதியில் உள்ள ரிஷிகங்கா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் அதன் துணை ஆறு அலகண்டா ஆகியவற்றில் கடந்த 7-ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரிஷிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்து 13.2 மெகா திறன் கொண்ட நீர் மின்சக்தி நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 520 மெகா வாட் நீர் மின் நிலையத்தையும், வெள்ளம் சேதப்படுத்தியது.
என்டிபிசி திட்டத்தின் மற்றொரு சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பதாக கருதப்படும் 35 பேரை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன என்றும் நிலவரத்தை பிரதமர் மோடி உன்னிப்பாக கண்காணித்து வருகிறார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
Comments