சட்டமன்றத் தேர்தல் ஆய்வு -தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வருகை
தமிழக சட்டமன்றத் தேதி , தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடகள் குறித்து ஆய்வு செய்தற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று தமிழகம் வருகின்றனர். இரண்டு நாட்கள் முகாமிட்டு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கும் தேர்தல் ஆணையர்கள், அவர்களின் கருத்துகளை கேட்டறிகின்றனர்.
மாலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் கூட்டம் நடக்கிறது. இதில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யப்பட உள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., மற்றும் மூத்த மாநில அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
நாளை மாலை புதுச்சேரி செல்லும் தேர்தல் ஆணையக் குழுவினர், அங்குள்ள அரசியல் கட்சியினரையும், அதன்பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.க்களையும் சந்தித்து ஆலோசிக்கின்றனர்.
நாளை மறுதினம் புதுச்சேரி தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்துவிட்டு சென்னை திரும்பும் தேர்தல் ஆணையர்கள், பின்னர் கேரளாவிற்கு செல்கின்றனர்.
Comments