கழுதையை டென்சனாக்கிய காம்ரேட்ஸ்..! மனுவை வாங்க மறுத்து அடம்
கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கழுதையிடம் மனு கொடுத்த கம்யூனிஸ்ட்டு தோழரை கழுதை பதம் பார்க்க முயன்ற சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக இருபது தோழர்கள் போராடிக் கொண்டிருக்க, கழுதையுடன் போராடிய அந்த இரு தோழர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
அதிகாரிகளிடம் மனு கொடுத்து அலுத்து போன கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்திற்காக இரு கழுதைகளை கயிறு மற்றும் துணியால் கழுத்தையும், வாயையும் கட்டி இழுத்து வந்திருந்தனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கவும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவும், கனமழையால் சேதமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் 20 தோழர்கள் செங்கொடி ஏந்தி உரக்க போராடிக் கொண்டிருந்த நிலையில், தோழர் ஒருவரின் சத்தம் கேட்டு அதிர்ந்து போன நிலையில், அவர் கருப்புக் கழுதையுடன் போராடிக் கொண்டிருந்தார்..!
ஆரம்பத்தில் அடம்பிடித்த வெள்ளைக்கழுதை சாந்தமாக நின்ற நிலையில் கருப்பு கழுதை திமிறிக்கொண்டு சற்று உக்கிரமாக இருந்தது. ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்திய தோழரை தனது இடது காலால் டீல் செய்ய முயன்ற போது அந்த தோழர் சாமார்த்தியமாக தாக்குதலில் இருந்து தப்பினார்
பின்னர் இரு தோழர்கள் சேர்ந்து கருப்பு கழுதையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் பிடித்து வைத்திருக்க பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தது. போரட்டத்தின் கிளைமேக்ஸில் கழுதையிடம் மனு கொடுக்கும் வைபவம் அரங்கேறியது.
ஏற்கனவே டென்சனாக இருந்த கருப்பு கழுதையை காண்டாக்கும் விதமாக அதனிடம் தோழர் ஒருவர் மனுவை நீட்ட, அதனை சட்டை செய்யாமல் மவுனம் காத்தது அந்த கருப்பு கழுதை
அந்த மனுவை வாங்குவதற்கு சிபாரிசு செய்வது போல சிவப்பு துண்டு போட்ட தோழர் அருகில் வரவும், ஆவேசமான கழுதை அவர்களை தாக்க குதிரை போல கால்களை உயர்த்தி பாய்ந்தது, இருவரும் நகர்ந்து விட்டதால் தப்பினர்
இதையடுத்து வெள்ளை கழுதையிடம் கோரிக்கை மனுவை நீட்டினர், அதன் வாயில் கொண்டு மனுவை கொடுத்து திணித்த நிலையிலும் அது கூட காம்ரேடுகளின் மனுவை வாங்கிக் கொள்ள மறுத்து அடம் பிடித்தது.
அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக கழுதைக்கு சொந்தக்காரர் கழுதைக்கு அருகே நின்றதால் தோழர்கள் தாக்கப்படாமல், காக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
பெட்ரோல் விலையை குறைக்க நாம் போராட வேண்டியது கவர்மெண்டுக்கு எதிராகத்தானே அன்றி, கழுதைகளுடன் அல்ல என்பதை நம்ம ஊர் அரசியல் வாதிகள் எப்போது உணர போகின்றனர் என்பதே இந்த காட்சிகளை பார்த்த பொது மக்களின் கமெண்டாக இருந்தது.
Comments