கடனாளியான ப்ரீ பயர் பாய் தலைமறைவு..! ஆன் லைன் அடிமைகள் பரிதாபம்
தமிழக சிறுவர்களிடம் நஞ்சாகப் பரவி வரும் ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டால், பலர் பணத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழு மோதல், பணம் இழப்பு என வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ப்ரீ பயர் அடிமைகளான சிறுவர்களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் சென்னை சிட்டிவரை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் வாங்கிக் கொடுத்துள்ள ஸ்மார்ட் போன்கள் அவர்களை ப்ரீ பயர் என்னும் ஆன் லைன் விளையாட்டுக்கு அடிமைபடுத்தி இருக்கின்றது.
கபடி, கில்லி, கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் இன்று முட்டுச்சந்தின் கும்பலாக அமர்ந்து கொண்டு ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டை குழுவாக விளையாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதியில் ப்ரீ பயர் விளையாடும் சிறுவர்கள் தங்களுக்குள் சாதி ரீதியாக பிரிந்து மோதிக்கொள்ளும் அளவுக்கு இந்த விளையாட்டில் தீவிரம் காட்டினர். இரு குழுவாக மோதிக்கொள்வதற்கு முன்பாக காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட சிறுவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பிய நிகழ்வுகள் அரங்கேறின.
அந்தவகையில் கரூர், சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் நிலையில் தாயின் ஸ்மார்ட் போனில் ப்ரி பயர் விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார்.
ஆன் லைன் வகுப்புகள் கவனித்த நேரம் போக மீதமுள்ள நேரங்களில் ப்ரி பயர் விளையாட்டில் முன்பின் அறிமுகம் இல்லாத சிறுவர்களுடன் இணைந்து விளையாடி வந்துள்ளான். இதனை கண்டித்த சிறுவனின் தாய் அவனிடம் இருந்து ஸ்மார்ட் போனை வாங்கி வைத்துள்ளார். இருந்தாலும் தனது தாய்க்கு தெரியாமல் ஸ்மார்ட் போனை எடுத்து 3க்கும் மேற்பட்ட கணக்குகளை துவங்கி விளையாடி வந்துள்ளான் அச்சிறுவன்.
இதில் பலமுறை தோல்வி அடைந்த நிலையில், தன்னுடன் விளையாடிய சிறுவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாயிண்ட்களை கடன் பெற்று விளையாடிய நிலையில், அதனை திரும்ப செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
கடனை ஈடுகட்ட தான் பயன்படுத்திய 2 கணக்குகளை அந்த சிறுவர்களுக்கு வழங்கிய மணி மாதவனை, 4500 பாயிண்ட்ஸ் கடன் கொடுத்த 3 சிறுவர்கள் மிரட்டியுள்ளனர். வீட்டிற்கு போன் செய்து கடன் வாங்கி விளையாடியதை சொல்லி விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன், தனது செல்போனில் வீட்டை விட்டு வெளியேறுவதாக வீடியோ பதிவு செய்து வைத்து வீட்டு, வீட்டில் கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 6ம் தேதி வெளியேறி பேருந்தில் ஏறி திருச்சிக்கு சென்றுள்ளான்.
திருச்சியில் கையில் இருந்த பணம் எல்லாம் காலியான நிலையில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பானிபூரிக்கடையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திருச்சி மலைக்கோட்டை போலீசால் மீட்கப்பட்டுள்ளான். இதற்கிடையே தனது மகன் காணாமல் போனதாக, பெற்றோர் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சிறுவனை பத்திரமாக மீட்டு வந்த போலீசார் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர் சிறுவனுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சில சிறுவர்கள், தங்கள் தாயின் நகைகள், பெற்றோர் சேமித்து வைத்திருக்கும் பணத்தைக்கூட திருடி பணத்தை இழக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது.
ப்ளூவேல், பப்ஜி ஆன் லைன் விளையாட்டு வரிசையில் மாணவர்களுக்கு தீங்கிளைக்கும் ப்ரீ பயர் விளையாட்டையும் தடை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments