’சொல்லின் செல்வர்’ கிருபானந்த வாரியாருக்கு அரசு விழா - முதல்வர் அறிவிப்பு...

0 3300

முருக பக்தரான கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 - ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ் கூறும் நல்லுலகின் மிகச் சிறந்த முருக பக்தராக அறியப்படுபவர், கிருபானந்த வாரியார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவராவார். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேய நல்லூர் எனும் கிராமத்தில், மல்லையதாசர் - கனகவல்லி தம்பதிக்கு 1906 ம் ஆண்டு ஆகஸ்ட் 25 - ம் நாள் பிறந்தார். இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார். கிருபை என்றால்  கருணை என்றும் ஆனந்தம் என்றால் இன்பம் என்றும் வாரி என்றால் பெருங்கடல் என்றும் பொருள். பெயருக்கேற்றபடியே, பிறரைத் தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கருணைப் பெருங்கடலாகத் திகழ்ந்தார் கிருபானந்த வாரியார்.

எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற கிருபானந்த வாரியார் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை மனப்பாடம் செய்துவிட்டார். அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவற்றை சிறு வயதிலிருந்தே இயற்றத் தொடங்கினார் வாரியார் சுவாரிகள்.

சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி, சொல்லின் செல்வர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவராவார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் எனும் பட்டத்தை வழங்கியதும் கிருபானந்த வாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் செல்லும் இடங்களில் எல்லாம் நகைச்சுவை கலந்து மகிழ்ச்சியை எளிய மக்களிடம் சேர்த்து அறியாமையை விலக்கி, அறநெறியை மேம்படுத்தும் விதமாக சொற்பொழிவாற்றி வந்தார்.  செல்லும் இடங்களில் எல்லாம் இவரது பேச்சைக் கேட்க பெரும்கூட்டம் கூடும். இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவராவார்.

சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150 - க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். எளிய மக்களும் புரிந்துகொள்ளும் விதமாக 500 - க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது சொற்பொழிவுகள் மட்டும் சுமார் 80 க்கும் மேற்பட்ட குறுந்தடுகளாக வெளிவந்துள்ளன. ஆன்மிகப் பணியாற்றுவதையே தவ வாழ்க்கையாக வாழ்ந்து வந்த கிருபானந்த வாரியார் 1993 - ம் ஆண்டு நவம்பர் 7 - ம் தேதி முருகனின் பாதங்களை சென்றடைந்தார்.

கிருபானந்த வாரியாருக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்று பலதரப்பினரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 25 - ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இவரது அறிவிப்பு முருக பக்தர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments