சுரங்கத்தில் சிக்கிய 35 பேர் - இடைவிடாமல் நடக்கும் மீட்பு பணி
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 35 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு காரணமாக இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பனிப்பாறைகள் உடைந்ததன் காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நிலச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரோவின் ஒரு அங்கமான ஐஐஆர்எஸ் நிறுவனம் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 5600 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையை சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், 14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரிஷிகங்காவின் கீழ்நிலைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத், சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு ஜோஷிமத் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 12 தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரிவேந்திரசிங் ராவத், தபோவனத்திலுள்ள சுரங்கத்திற்குள் ஏறத்தாழ 35 தொழிலாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் இடைவிடாமல் மீட்பு பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
மீட்பு படையினர் மலரி பள்ளத்தாக்குப் பகுதியை சென்றடைந்திருப்பதால், தேவையான உணவுப் பொருட்களை அங்குள்ள மக்களுக்கு எளிதாக வழங்க முடியும் என்றும் திரிவேந்திரசிங் ராவத் குறிப்பிட்டடார்.
Comments