காளிங்கராயன் கால்வாயில் கழிவு நீர்... அத்தனை ஆலைகளுக்கும் சீல்!- விவசாயிகள் மகிழ்ச்சி

0 2143

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவு நீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய 30க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு சீல் வைத்து மூடிய அலுவலர்கள் 2வது நாளாக 5க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு மின்சார இணைப்பைத் துண்டித்து சீல் வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் வெண்டிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காளிங்கராயன் கால்வாயில் கடந்த சில நாட்களாக சாயக்கழிவுகள் அதிகம் கலப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியன் மேற்கொண்ட ஆய்வில் காளிங்கராயன் கால்வாய் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக குழாய்கள் பதித்து அதன் மூலம் கால்வாயில் நேரடியாக சாயக்கழிவுகள் திறந்து விடுவது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஒரே நாளில் மட்டும் மொடக்குறிச்சி மற்றும் வெண்டிபாளையம் பகுதிகளிலுள்ள 30க்கும் மேற்பட்ட சாயம் மற்றும் சலவை ஆலைகளுக்கு சீல் வைத்தனர். இதனிடையே தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் குழு வெண்டிபாளையம் மோகன் தோட்டம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயத் தொழிற்சாலைகளில் முறையான சுத்திகரிப்பின்றி சாயக்கழிவுகளை நீர் நிலைகளை திறந்து விடப்படுவதைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று மாலை வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையிலான வருவாய்த்துறையினர் மோகன் தோட்டம் பகுதிக்கு சென்று 5- க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கான மின்சார இணைப்பைத் துண்டித்ததுடன், அந்த ஆலைகளுக்கு சீலையும் வைத்தனர். எச்சரிக்கையை மீறியும் நீர் நிலைகளில் தொடர்ந்து சாயக் கழிவுகளை திறந்து விடும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீண்டும் திறக்கவே முடியாத சட்டப்பிரிவுகள் கீழ் ஆலைகளுக்கு சீல் வைத்து மூடப்படுமென்று வருவாய்த்துறையினர் ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். இதனையடுத்து ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments