சென்னையில் புதிய சாலை... முதலமைச்சர் திறந்து வைத்தார்!
சென்னை வெளிவட்டச்சாலையின் இரண்டாம் கட்டமாக 1025 கோடி ரூபாய் செலவில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான ஆறு வழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோ மீட்டர் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரையிலான 27 கிலோ மீட்டர் நீள சாலை ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டது.
தற்போது நெமிலிச்சேரி - மிஞ்சூர் இடையே 1025 கோடி ரூபாய் மதிப்பில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட ஆறு வழித்தட பிரதான சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் 121 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்படவுள்ள 6 தளங்கள் கொண்ட கட்டிடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 110 கிலோ வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டதாக தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாயை மின்னணு முறையில் பெற்றுக்கொள்ளும் வசதியையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
Comments