உத்தரகாண்ட் வெள்ளம்: தொய்வின்றி தொடரும் மீட்புப் பணி

0 2510
உத்தரகாண்ட் வெள்ளம்: தொய்வின்றி தொடரும் மீட்புப் பணி

உத்தரகாண்டில் பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 200 பேரை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி என்ற இடத்தில் பனிப்பாறை பெயர்ந்ததால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும் இரைச்சலோடு பாய்ந்தோடிய வெள்ளம் கண்ணில் கண்டதை எல்லாம் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றது. அங்கு கட்டப்பட்டிருந்த தபோவான் நீர்மின் நிலையில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 35 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மீட்புப் பணியில் ராணுவம், விமானப்படை, இந்தோ திபெத் எல்லைப் படை, தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். அல்கானந்தா, தவுளிகங்கா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் 13 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிராமத்தினருக்கு ஹெலிகாப்டர் உதவியுடன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கிய 27 பேர் உயிருடனும், 26 பேர் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான மேலும் 197 பேரை தேடும் பணிகளில் 4 படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்று உத்தரகாண்ட் டிஜிபி அசோக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீட்புப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடந்து வருவதாகக் குறிப்பிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதற்கட்டமாக 20 கோடி ரூபாயை விடுவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments