வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும் - பிரதமர் மோடி
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதையடுத்து விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த பிரதமரின் அழைப்பை விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
மாநிலங்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாக விமர்சித்தார்.
விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு என்ற பெயரில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முயற்சி செய்வதை மறைமுகமாக சாடிய அவர், அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கும் அதேசமயம் புதிய வகை எஃப்டிஐ ஆக நுழைய முயற்சி செய்யும் வெளிநாட்டு அழிவு சித்தாந்தத்தில் இருந்து தேசத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
போலியோ, பெரியம்மை போன்றவை இந்தியாவை அச்சுறுத்திய காலங்களில் இந்தியாவுக்கு தடுப்பூசி கிடைக்குமா என்பதே தெரியாத நிலை இருந்தாவும், ஆனால் தற்போது இந்தியா உலகத்திற்கே தடுப்பூசி தயாரிப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், இது நமது தன்னம்பிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாக கூறிய சமியுக்தா கிசான் மோர்ச்சா சங்கம், கூட்டத்தின் தேதி மற்றும் நேரத்தை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினர்.
Comments