போலீஸ் நிலைய வெடிகுண்டு வீச்சு பின்னணி என்ன ? விரட்டும் தீரா பகை
நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையம் அருகே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா பாணியில் பழிக்கு பழி வாங்கி டான் (Don) ஆக திட்டமிட்டு நடந்த தாக்குதல் தோல்வியில் முடிந்த பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான். தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவராக உள்ள இவர் மீது 11 கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது. தனது பழைய வழக்குகள் தொடர்பாக காவல் நிலையங்களில் அவ்வப்போது கையெழுத்திட செல்வது வழக்கம்.
அந்தவகையில் தளவாய் என்பவரை தாக்கிய வழக்கு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை, தனது வீட்டுக்கு அருகில் உள்ள தச்சநல்லூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார் கண்ணபிரான். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது வீடு மற்றும் காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
நூல் சுற்றி தயாரிக்கப்பட்ட 5 நாட்டு வெடி குண்டுகள் வீசியதில் 4 குண்டுகள் வெடித்தன. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வீச்சில் யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை . ஒரு குண்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக கண்ணபிரானிடம் காவல் துணை கண்காணிப்பாளர் நேரடியாக விசாரித்தார்
காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் பிரவீன் ராஜ், ராஜசேகர், அழகர், விக்ரமன் ஆகிய 4 இளைஞர்கள் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் கண்ணபிராணுக்கு வைக்கப்பட்ட குறி அல்ல என்றும் அவருடன் சென்ற தீபக்ராஜா, ஊசிபாண்டி ஆகியோரை குறிவைத்து குண்டு வீசியதாக தெரிவித்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு வீசியதாக சரணடைந்த 4 பேரும், கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பாட்ஷா மாடசாமி என்பவரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்றது.
பாட்ஷா மாடசாமியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தீபக் ராஜாவும், ஊசி பாண்டியும், கண்ணபிரானுடன் காவல் நிலையம் செல்வதாக கிடைத்த தகவலில் பேரில் சினிமா பாணியில் பழிக்கு பழிவாங்கும் விதமாக திட்டமிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த வெடிகுண்டு வீச்சு திட்டத்தை செயல்படுத்தியாதாக கூறப்படுகின்றது.
முதலில் கண்ணபிரான் வீட்டருகே வெடிகுண்டு வீசியவர்கள், அந்த முயற்சி தோற்றதால், காவல் நிலையத்தின் அருகேயும் வீசியுள்ளனர். 2 வது தாக்குதலும் தவறியதால் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சரணடைந்த பிரவீன்ராஜ் கும்பல் மீது 3 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
பழிக்கு பழியாக தாக்குதல் நடத்தி கொலை செய்தால் சமூகத்தில் டான் ஆகிவிடலாம் என்ற கனவில் நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து இது போன்ற கொலை சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும், இது போன்ற வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சாட்சிகள் இன்றி எளிதாக தப்பி விடுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Comments