வாடகை நாடகமாடி திருடப்பட்ட கார் “வாட்சப்”பால் சிக்கிய திருடன்..!
கடலூரில் காரை வாடகைக்கு எடுப்பது போல் நாடகமாடி ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி, காரை கடத்திச் சென்ற நபர் வாட்சப் உதவியுடன் பொதுமக்களிடம் சிக்கினான்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வாடகைக் கார் ஓட்டி வரும் ஆனந்த் என்பவரை ஞாயிற்றுக்கிழமை மதியம் டிப் டாப் ஆசாமி ஒருவன் அணுகியுள்ளான். புதுச்சேரி செல்ல வேண்டும் என அவன் கூறவே, 2500 ரூபாய் வாடகை பேசி காரை எடுத்துச் சென்றுள்ளான். கடலூர் அருகே சென்றபோது சாலையோர உணவகத்தில் சாப்பிடலாம் எனக் கூறி காரை நிறுத்திய ஆசாமி, ஓட்டுநர் ஆனந்த்தையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்துள்ளான். தயக்கத்துடனேயே சென்ற ஆனந்த், உள்ளே அமர்ந்து அவனுடன் உணவருந்தியுள்ளார்.
சிறிது நேரத்தில் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி சாப்பாட்டை பாதியில் வைத்த மர்ம ஆசாமி, “நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள், நான் காரில் ஓய்வெடுக்கிறேன்” எனக் கூறி ஆனந்த்திடம் கார் சாவியை கேட்டுள்ளான்.
கார் சாவியைக் கொடுக்க ஆனந்த் தயங்கிய நிலையில், அவர் கையில் 2 ஆயிரம் ரூபாய் தாளைக் கொடுத்து பில் தொகையை செலுத்திவிட்டு வாருங்கள் எனக் கூறிவிட்டு, சாவியை வாங்கிச் சென்றுள்ளான் மர்ம ஆசாமி. சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடித்து ஆனந்த் வெளியே வந்து பார்த்தபோது, அந்த நபரையும் காணவில்லை, காரையும் காணவில்லை. உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகாரளித்த ஆனந்த், கார் திருடு போனது குறித்து, தனது வாட்சப்பில் உள்ள அனைத்துக் குழுக்களிலும் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை மதியம் கம்மாபுரம் பகுதியில் ஆனந்த்தின் காரைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர், ஊர் மக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தபோது, காரில் இரண்டு பேர் இருந்துள்ளனர். விசாரணையில் காரைத் திருடிச் சென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமாரும், அவனது நண்பன் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது.
காரைத் திருடிச் சென்ற அஜித்குமார், திருச்சிக்கு சென்று விற்க முயன்றுள்ளான். காரை வாங்க யாரும் முன்வராததால், விருத்தாசலம் வந்து தனது நண்பன் மணிகண்டனை அழைத்துக் கொண்டு பெரம்பலூர் நோக்கிச் செல்லும்போது பிடிபட்டது தெரியவந்தது.
Comments