’நதி நீர் வரலைனா என்ன, நாங்க வரவைப்போம்’ - 30 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த கிராம மக்கள்!
முப்பது வருடங்களுக்கும் மேலாக வராத வைகை நதி நீரை, நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிராமத்துக்குக் கொண்டுவந்து சாதித்துள்ளனர் மதுரை மாவட்டம், உ.புதுக்கோட்டை கிராம மக்கள்.
தேசிய ஊரக வேலை அளிப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் கிராமப்பகுதி மக்களை சோம்பேறிகளாக்கும் திட்டம் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டத்தின் மூலமும் கிராமத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று சாதித்துள்ளனர் உ.புதுக்கோட்டை கிராம மக்கள்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள 33 கண்மாய்கள் பாசனவசதி பெறும் வகையில் 58 கிராம கால்வாய்த்திட்டம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு வழியாக கடந்த 2020 ம் ஆண்டு முடிக்கப்பட்டு இருமுறை சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது வைகை அணையின் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் கண்மாய்களுக்குத் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.
தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை நிரம்பியது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 16 - ம் தேதி வைகை அணையிலிருந்து 58 கால்வாய் வழியாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு நாட்களில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து உத்தப்ப நாயக்கனூர் அருகே 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசியாவின் 2 வது தொட்டிப்பாலத்துக்கு வைகை தண்ணீர் வந்தடைந்தது. அங்கிருந்து 13 கிலோ மீட்டரை 2 நாட்களில் கடந்து உசிலம்பட்டி கண்மாய்க்குத் தண்ணீர் வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டும் செல்லும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூர் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள பாறைப்பட்டி கண்மாய் வழியாக உ.புதுக்கோட்டை கண்மாய்க்குத் தண்ணீர் செல்லும். இது பற்றி முன்பே கணித்த உ.புதுக்கோட்டை கிராம மக்கள் நூறுநாட்கள் வேலை திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு மாதங்களாகக் கால்வாயைத் தூர்வாரும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். தற்போது, வைகை நதி தண்ணீர் உத்தப்பநாயக்கணூர் அருகே உள்ள டேவிட்பண்ணை பகுதியில் உள்ள கால்வாய் வழியாக உ.புதுக்கோட்டை கண்மாய்க்குத் தண்ணீர் வந்தடைந்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உ.புதுக்கோட்டை கண்மாய் நிரம்பினால் அதனைச் சுற்றியுள்ள பெருமாள்கோவில்பட்டி, குளத்துப்பட்டி, மொண்டிகுண்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
100 நாள் வேலைத் திட்டம் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு கண்மாய்க்கு வைகை தண்ணீரைக் கொண்டுவந்து சாதித்த உ.புதுக்கோட்டை கிராம மக்கள் மற்றும் அதன் ஊராட்சி மன்றத்தலைவரை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Comments