இரவோடு இரவாக அறுவை சிகிச்சை... ரிஸ்க் எடுத்து விரலை ஒட்டிய அரசு மருத்துவர் - குவியும் பாராட்டு!

0 9941

திருச்சி அருகே, சிறுமியின் துண்டான விரலைச் சொந்த மருத்துவ உபகரணங்கள் கொண்டு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து ஒட்ட வைத்த அரசு மருத்துவரை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள தெற்கு எல்லை காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கீதா. கூலி வேலை செய்து வரும் இவர் தனது கணவனைப் பிரிந்து, தன் 12 வயது மகள் சரண்யாவுடன் தனியே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல, கடந்த 25 ஆம் தேதி, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டச் சென்றுள்ளார் சங்கீதா. உடன் அவர் மகள் சரண்யாவும் சென்றார். தாய்க்கு உதவியாக சரண்யா கரும்பு வெட்டும்போது, தவறுதலாகக் கையை வெட்டிக்கொண்டார். இந்த நிலையில், அவரது  இடது சுண்டு விரலின் முன் பகுதி எலும்போடு துண்டானது. இதனால் சரண்யாவிற்கு அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யாவின் தாய் சங்கீதா, மகளின் கையை ஒரு கைக்குட்டையால் சுற்றிக்கொண்டு , துண்டான விரலுடன் சரண்யாவையும் அழைத்துக்கொண்டு பல மருத்துவமனைகள் ஏறி இறங்கினார். இது சற்று சவாலான அறுவை சிகிச்சை என்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில், இறுதியாக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சங்கீதா.

இதனை சவாலாக எடுத்துக்கொண்ட, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பியல் மருத்துவர் ஜான் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழு, இரவோடு இரவாக 12 :30 மணிக்கு சிறுமி சரண்யாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய தயாரானது. இது மிகவும் கடினமான அறுவை சிகிச்சை என்பதால், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்குத் தேவையான சில மருத்துவ உபகரணங்கள் இல்லை. இருப்பினும், மருத்துவர் ஜான் விஸ்வநாதன் தனது சொந்த உபகரணங்களைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பினனர், சிறுமி சரண்யாவின் துண்டான விரல் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை வரலாற்றில், இப்படி ஒரு சவாலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பதால் மருத்துவக் குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரசு மருத்துவமனை என்றாலே ஆயிரம் குறைகள் நினைவுக்கு வரும் நிலையில், நேரத்தைப் பொருட்படுத்தாமல், விரைவாகச் செயல்பட்டு மகளின் விரலை ஒட்ட வைத்த மருத்துவர் ஜான் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவிற்கு சங்கீதா தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments