பனிப்பாறைகள் வடிவில் வெடித்து கிளம்பிய இயற்கைச் சீற்றம்: தவிடுபொடியாக்கிய பெருவெள்ளம்
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் வெடித்து, கங்கையின் கிளை ஆறுகளான ரிஷிகங்கை, தவுலிகங்கையில் ஏற்பட்ட எதிர்பாராத பெரும் வெள்ளத்தால் சிக்கி 207 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ராணுவம், விமானப்படை, பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
கடவுள்களின் பூமி என வர்ணிக்கப்படும் உத்தரகாண்ட் மாநிலம், புனித யாத்திரைத் தலங்களும், புகழ்பெற்ற கோவில்களும் நிரம்பியது. இமயமலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள மாநிலம் என்பதால், 86 சதவீதம் மலைப்பாங்கான பகுதிகளை கொண்டது. பனிமலைகளில் இருந்து கங்கையும், யமுனையும் உற்பத்தியாகும் நதிமூலங்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன. ரிஷிகங்கை, தவுலிகங்கை ஆகியவை கங்கையின் வளம்பெருக்கும் கிளை ஆறுகள். இதில் ரிஷிகங்கை, தவுலிகங்கை உருவாகும் பனிப்பாறைகளின் பரப்பளவு சுருங்கிக் கொண்டே வருவதோடு, பனிப்பாறைகளின் சமநிலை குலைந்து வருவதாகவும் வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில்தான், சமோலி மாவட்டத்தில், கடுங்குளிர் காலத்தில் யாரும் எதிர்பாராத பனிப்பாறை வெடிப்பு, ரிஷிகங்கையின் மேல்பகுதியில் ரைனி (Raini) என்ற கிராமத்தின் அருகே நேற்று ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில், தவுலிகங்கா-ரிஷிகங்கா சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள அணை அடித்துச் செல்லப்பட்டதோடு, தபோவன் அருகே இரண்டு பாலங்களும் நீரில் அரித்துச் செல்லப்பட்டன. தவுலிகங்கை ஆற்றின் கரையில், ரிஷிகங்கை நீர்மின் திட்டம், தேசிய அனல்மின் கழகத்தின் தபோவன் நீர்மின் திட்டம் ஆகிய இரண்டும் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன.
இரு நீர்மின் திட்டங்களிலும் பணியாற்றி வந்த 153 பேர் மாயமாகினர். ரைனி கிராமத்தை சேர்ந்த, கரையோரத்தில் கால்நடைகளை மேய்துக் கொண்டிருந்த சிலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இடி இடித்தது போன்ற மிகப்பெரும் ஓசை கேட்டதாகவும், மலையின் வழியாக பிரம்மாண்ட மதில் சுவர் போல உருவெடுத்து வந்த வெள்ளப்பெருக்கு வழியில் மரங்கள், மனிதர்கள் கால்நடைகள் என எதிர்ப்பட்டதையெல்லாம் துவம்சம் செய்தபடி சென்றதாக ரைனி கிராமத்தை சேர்ந்த, தாயைப் பறிகொடுத்த நபர் கூறியுள்ளார்.
மீட்ப்பு பணியில் ராணுவம், இந்தோ-திபெத் காவல்படை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அடித்துச் செல்லப்பட்ட தபோவன் அணை அருகே, யாரும் சிக்கியுள்ளனரா என மோப்ப நாய்கள் சகிதமாக மீட்பு பணிகள் நடைபெற்றன.தபோவன் அணை அருகே, சுரங்கப்பாதை அமைந்திருந்த பகுதியே தெரியாத அளவுக்கு சேறும், சகதியும், கூளங்களும் மூடியிருந்தன. அவற்றை அகற்றி சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற சுரங்கப்பாதைகளில் சுமார் 30 முதல் 40 பேர் வரை சிக்கியிருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தில் சிக்கி 203 பேர் மாயமாகியுள்ளதாகவும், இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
Comments