வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் - பிரதமர் மோடி
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீண்டும் உறுதியளித்துள்ளார்.
அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கும் அதேசமயம், புதிய வகை எஃப்டிஐ ஆக நுழைய முயற்சி செய்யும், வெளிநாட்டு அழிவு சித்தாந்தத்தில் இருந்து தேசத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, குடிசைக்கு வெளியே விளக்கேற்றி வைத்து நாட்டின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு மூதாட்டியின் படத்தை சமூகவலைத்தளங்களில் பார்த்திருக்கலாம் என குறிப்பிட்டார்.
பள்ளிக்கூடமே சென்றிராத ஒருவர், விளக்கேற்றி நாட்டைக் காப்பாற்றிவிட முடியும் என்று நம்பினால், அவர்கள் அதைச் செய்யட்டும், ஆனால் அதை கேலி செய்வது எப்படி ஏற்புடையதாகும் என பிரதமர் கேள்வி எழுப்பினார்.
போலியோ, பெரியம்மை போன்றவை இந்தியாவை அச்சுறுத்திய காலங்களில் இந்தியாவுக்கு தடுப்பூசி கிடைக்குமா என்பதே தெரியாத நிலை இருந்தது. ஆனால், இந்தியா இன்று உலகத்திற்கே தடுப்பூசி தயாரிப்பதாகவும், இது நமது தன்னம்பிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாம் வளர்ச்சிக்காக எஃப்டிஐ FDI எனப்படும் அந்நிய முதலீடு குறித்து பேசும் வேளையில், புதிய வகை எஃப்டிஐ நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார். இத்தகையை வெளிநாட்டு அழிவு சித்தாந்தத்தில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு என்ற பெயரில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முயற்சி செய்வதை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு சீக்கியர்கள் குறித்தும் நாடு பெருமை கொள்வதாகக் குறிப்பிட்ட மோடி, அவர்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும், அது தேசத்திற்கு நல்லதல்ல என்றும் கூறினார்.
1930களில் உருவாக்கப்பட்ட சந்தை முறைகள் பெரும் இடையூறாக இருப்பதாகவும், விவசாயிகள் நல்ல விலைக்கு வேளாண் பொருட்களை விற்பதற்கு அவை தடையாக இருப்பதாகவும் முன்னர் மன்மோகன் சிங் கூறியதை பிரதமர் மேற்கோள் காட்டினார்.
Comments