சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்பினார்
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் புறப்பட்ட சசிகலா தமிழக எல்லையில் அதிமுக கொடியுடன் வந்த மற்றொரு காரில் ஏறி பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததை அடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு புறநகர் பகுதியிலுள்ள சொகுதி விடுதியில் தங்கி சசிகலா ஓய்வெடுத்தார். இந்த நிலையில், இன்று காலை பெங்களூருவின் தேவனஹள்ளியிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா புறப்பட்டார்.
கார் தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதிக்குள் நுழைந்த போது, சசிகலா வேறு காருக்கு மாறினார். அதனையடுத்து, அவர் வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது. சசிகலா மாறி பயணித்த வேறு காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
அதிமுக கொடியுடன் இருந்த காரில் வந்த சசிகலாவை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அதிமுக கொடியுடன் தமிழகத்துக்குள் பயணிக்கக்கூடாது எனக்கூறி அதனை அகற்றுமாறு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் போலீசார் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு மறுப்பு தெரிவித்து, ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பான சூழல் நிலவியது.
கார் ஓசூரை தாண்டியதும், சசிகலா காரின் பின்னால் அணிவகுத்து வந்த சில வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
சசிகலா மாறிய கார், அதிமுக பிரமுகர் எஸ்.ஆர். சம்பங்கி என்பவருடையது என தெரியவந்துள்ளது. இவர் அதிமுகவின் உறுப்பினர் எனக் கூறப்படும் நிலையில், அதன் அடிப்படையில் அவரது காரில் அதிமுக கொடியுடன் சசிகலா பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சென்னை வரும் சசிகலா ராமாபுரத்திலுள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு செல்வதாக கூறினார். சசிகலா முதலில் வந்த காரில் கோளாறு ஏற்பட்டதால், வேறு காரில் பயணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments