உத்தரகாண்ட் பெருவெள்ளம் மீட்புப் பணியில் ராணுவம் - விமானப்படை

0 5056

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி மாயமான 170 க்கும் அதிகமானோரைத் தேடும் பணியில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

உத்தரக்கண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அதிகப் பனிப்பொழிவால் மலைப்பகுதியில் படிந்திருந்த பனிப்பாளங்கள் திடீரெனச் சரிந்தன. பனிப்பாளங்கள் உருகித் தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா என்ற ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிவேகத்தில் வந்த வெள்ளத்தால் அணை உடைந்ததில் ரிசிகங்கா நீர்மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.

ஜோசிமத் என்னுமிடத்தில் ஆற்றின் மீதிருந்த 5 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக எல்லைச் சாலைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மலைப்பகுதியில் உள்ள 4 நீர்மின் நிலையங்களும் அபாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தவுளிகங்கா, அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள மக்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரக்கண்ட் அரசு எச்சரிக்கை விடுத்தது. எனினும் நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய 148 தொழிலாளர்கள், கரையோரப் பகுதி மக்கள் என 170 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கரையோரத்தில் உள்ள சமோலி, ஜோசிமத் உள்ளிட்ட பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்க விமானப்படையின் ஹெலிகாப்டரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர். சமோலி மாவட்டம் Tapovan அணை அருகே உள்ள சுரங்கம் ஒன்றில் சிக்கியவர்களை இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் வெள்ளம் குறித்து பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் 4 லட்சம் ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments