கொரோனா தாக்கம் குறைந்தது: அனைத்து கல்லூரிகள் இன்று திறப்பு
தமிழகத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளும் இன்று முதல் இயங்குகின்றன.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் அறிவிப்பின்படி, கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.
இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு உள்பட அனைத்து வகுப்புகளும் இன்று முதல் வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக விடுதிகளும் இன்று முதல் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் திட்டமிட்டபடி 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.
பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள பள்ளி கல்வித்துறை, ஒவ்வொரு மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது, மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், முகக் கவசம் வழங்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
Comments