"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" - அரசுக்கு வலியுறுத்தல்.! பொதுமக்களுக்கு வாக்குறுதி.!
திமுக ஆட்சி அமைந்ததும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாம் கொடுக்கும் ரசீதை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்கே வரலாம் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக மாவட்டத்தில் சாதனை பெற்ற கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரயர்களை நியமித்த ஆட்சிதான் திமுக ஆட்சி என்றார்.
அனைத்து சமூகத்தினரும் போற்றும் தலைவராக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருந்தார் என்றும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுடைய கல்வி சமூக மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்களை அவர் அறிவித்தார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு ரசீதுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் திமுக ஆட்சி அமைந்ததும் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாம் கொடுக்கும் ரசீதை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்கே வரலாம் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சங்கரன்கோவிலைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் R.R.நகரில், பொதுமக்களுடன் கலந்துரையாடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். மறைந்த முதலமைச்சர்களின் மரணங்கள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஜெயலலிதாவின் மரணம் மட்டும் மறைக்கப்படலாமா ? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
Comments