மாநிலத் தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்பம் கற்பிப்பதே எனது கனவு - பிரதமர் மோடி
ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும் இருக்க வேண்டும் என்பதே தனது கனவு எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாலா என்னும் பெயரில் மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
விஸ்வநாத், சராய்தியோ ஆகிய இரு இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் உரையாற்றிய மோடி, அசாம் மாலா திட்டம் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், போக்குவரத்து மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றும் இருக்க வேண்டும் என்பதே தனது கனவாகும் எனத் தெரிவித்தார்.
அசாமில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றால் தாய்மொழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரியும், தொழில்நுட்பக் கல்லூரியும் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
உலக அளவில் இந்தியத் தேயிலைக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கச் சில வெளிநாட்டு சக்திகள் சதி செய்வதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார். அத்தகைய சதியை நம்மால் ஏற்க முடியுமா எனவும் வினவினார்.
Comments