வாழும் வீட்டின் வாசலிலேயே புதைக்கப்படும் முதியவர்களின் சடலங்கள்.. தேனி மாவட்டத்தில் தொடரும் சோகம்!

0 31291

வாழும்போது உற்றார் உறவினர் யாருமில்லை, இறந்தபின்பு புதைக்க மயானமே இல்லை, மயான வசதி செய்து தர அரசுக்கும் மனமில்லை, வாழும் வீட்டின் வாசலிலேயே புதைக்கப்படும் வயதான முதியவர்களின் சடலங்கள், தமிழக துணை முதல்வரின் மாவட்டத்தில் புதைக்கப்படும் பிணங்களின் மேல் பிணங்கள்.. இத்தகைய அவலமான நிலை குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

வயது முதிர்வால் உடல் சோர்வடைந்து வேலைக்குச் செல்ல இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குடும்பத்தை இழந்தவர்கள் மற்றும் குடும்பத்தால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணங்களால் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். கிடைக்கிறதை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி கிட்டத்தட்ட அநாதைகள் போல் அவர்கள் வாழ்ந்து வருவதை நாம் பார்த்திருப்போம். ஆயிரம் கண்கள் சுற்றி இருந்தும் சமூகத்தில் கவனிக்கப்படாத இந்த ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் தந்து கொண்டிருக்கிறது மனதுருக்கம் தர்ம அறக்கட்டளை.

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள பிராதுகாரன்பட்டி, கொடுவிலார்பட்டி மற்றும் ஜங்கால்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு ஆதரவு தந்து, தற்பொழுதும் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுடன் இயங்கி வருகிறது இந்த மனதுருக்கம் தர்ம அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையினை பேச்சிராஜா என்பவர் நிர்வகித்து வருகிறார். எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முதியவர்களுக்கு புகழிடமாக விளங்கி இங்கே முதியவர்களுக்கும் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு வழி செய்து கொடுக்கிறது இந்த தர்ம அறக்கட்டளை. அரசு அதிகாரிகளால் மீட்கப்படும் சாலையோர பிச்சை எடுப்போருக்கும் இந்த தர்ம அறக்கட்டளை தான் அடைக்கலம் தருகிறது.

உடல் நலிவுற்ற வயதான முதியவர்கள் அதிகம் இருப்பதால் இங்கு அடிக்கடி முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இங்கு மரணமடையும் முதியவர்களின் உடல்கள் இறந்த பின்பு படும்பாடு பெரும்பாடாக உள்ளது. இறந்த முதியவர்களின் உடல்களை சுற்றுப்புறத்தில் எந்த ஊர்களிலும் புதைக்கவோ அல்லது எரிக்கவோ அந்தந்த பகுதி மக்கள் அனுமதிப்பதில்லை. கிராமப்புறங்களில் உள்ள மயானங்களில் பிற ஊர்க்காரர்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ அனுமதிக்காத நிலை தான் பெரும்பாலும் காணப்படுகிறது. சரி, இவர்களின் உடல்களை மின் மயானத்திற்கு கொண்டு செல்லலாம் என்றால் இவர்கள் இருக்கும் பகுதியில் இருந்து மின் மயானத்திற்கு கொண்டு செல்ல வாகன செலவு மட்டும் சுமார் 2500 வரை ஆகிறது. மேலும் மின்மயானத்தில் இதுபோன்ற ஆதரவற்றோர் உடல்களை எரிப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பகுதியிலேயே புதைக்கலாம் என்றால் கூட கிட்டத்தட்ட 3 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்று வாங்குவதற்கும் பணம் கேட்டு பாடாய்ப்படுத்துவதால் வேறுவழியில்லாமல் கிராம நிர்வாக அலுவலரிடம் வெள்ளைக் காகிதத்தில் சீலிட்டு இறப்புச்சான்று வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

image

மனதுருக்கம் தர்ம அறக்கட்டளையில் இருப்பவர்களெல்லாம் நோய்வாய்ப்பட்ட வயதான முதியவர்கள் என்பதால் மரணம் என்பது மாதத்திற்கு நான்கைந்து நிகழ்கிறது. ஒவ்வொருவர் மரணத்தின் போதும் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு செய்ய இங்குள்ள நிர்வாகிகளால் இயலவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் மாவட்ட ஆட்சித்தலைவரிடத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் இங்குள்ளவர்களின் சடலங்களை இவர்கள் வசிக்கும் கட்டிடத்தின் வாயில் பகுதியிலேயே புதைக்கும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத அந்தப் பகுதியில் இதுவரை ஜங்கால்பட்டியில் 28 உடல்களும், பிராதுக்காரன் பட்டியில் 30 உடல்களும் வாசலிலேயே புதைக்கப்பட்டுள்ளது என்பது கொடுமையான விஷயம்.

வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து கடைசி காலத்தில் ஒதுங்குவதற்கு ஒரு நிழல் கிடைத்துள்ளது என்று கூட இவர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் நாளை நாம் இறந்தாலும் நம்முடைய உடல்களையும் தூக்கிக்கொண்டு இவ்வாறுதானே அலைவார்கள் என்று இருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் கண்கலங்கி நிற்கின்றனர். சொத்து சுகம் எவ்வளவு இருந்தும் கடைசியாக மனிதனுக்கு இருப்பது ஆறடி நிலம் தானே என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு, ஆனால் இங்கு இருக்கும் முதியவர்களுக்கு ஆறடி நிலத்திற்கும் வழியில்லை என்று நினைக்கும்போது நம்மையும் அறியாமல் கண்கலங்குகிறது. இருக்கும்போது அல்லல்படும் ஆதரவற்ற முதியவர்கள், இறந்த பிறகாவது அவர்களின் உடல்களை புதைக்க தமிழக அரசு ஒரு இடத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர் மனதுருக்கம் அறக்கட்டளை நிர்வாகத்தினர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments