தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டிக்கு வீட்டுச்சிறை
ஆந்திரத்தில் ஊராட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற இடையூறாக இருப்பதாகக் கூறி அமைச்சரை வீட்டுக்காவலில் வைக்க மாநிலத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரத்தில் 13 ஆயிரம் ஊராட்சிகளுக்கு பிப்ரவரி 9 முதல் 21 வரை 4 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. சித்தூர், குண்டூர் மாவட்டங்களில் போட்டியின்றித் தேர்வானோர் பெயர்களை மறு அறிவிப்பு வரும் வரை அறிவிக்க வேண்டாம் என ஆட்சியர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் அறிவுறுத்தினார்.
ஆணையரின் அறிவுறுத்தல்களைக் கண்டுகொள்ள வேண்டாம் என்றும், போட்டியின்றித் தேர்வானோர் பெயர்களை அறிவிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி பேசினார்.
இதையடுத்துத் தேர்தல் முடியும் வரை அவரை வீட்டுக் காவலில் வைக்கும்படி மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்குத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய அவர் ஊடகங்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Comments