களவே போகாத கிராமங்களிலும் களவு போயிருப்பது வியப்புதான் ; 4லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு
பென்னாகரம் அருகே கிராம் ஒன்றில் வீட்டின் பூட்டை உடைத்து 4லட்சம் மதிப்புள்ள நகையும் 8ஆயிரம் ரொக்கப் பணமும் திருடு போயிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ளது, கூத்தப்பாடி கிராம். இப்பகுதியை சேர்ந்தவர் ரதி. இவரது கணவர் சோமுவேல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் இளம்வயதிலேயே கணவரை இழந்த இவர், தனது 2 மகன்கள் மற்றும் பாட்டியுடன் கூத்தப்பாடியிலுள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். 39வயதான ரதி, அப்பகுதியிலுள்ள மாங்கரை அரசினர் மாணவியர் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே, இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரவு நேரங்களில் கீழ் வீட்டை பூட்டிவிட்டு, தூங்குவதற்காக மேல் வீட்டில் படுக்கச் சென்றுள்ளனர்.
இவற்றை நன்கு அறிந்துகொண்ட உள்ளூர்வாசிகளில் யாரோதான், முன்கூட்டியே திட்டமிட்ட நிலையில், நேற்று இரவு ரதியின் கீழ் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.. அதன்பின் மேல் வீட்டில் படுத்திருந்தவர்கள் அசந்து தூங்கியப் பிறகு வீட்டின் பூட்டை சத்தம் கேட்காதவாறு சாமர்த்தியமாக உடைத்துள்ளனர்.
இந்நிலையில், காலையில் தூங்கி எழுந்து கீழ் வீட்டிற்கு வந்த ரதிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த 12பவுன் நகையும் 8ஆயிரம் ரூபாய் பணமும் திருடு போயிருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகளும் பொருட்களும் வீடெல்லாம் சிதறிக் கிடந்தது.
இதனையடுத்து, திருடுபோன நகையையும் ரொக்கப் பணத்தையும் கண்டிபிடித்து தருமாறு ஒகேனக்கல் காவல்நிலையத்தில் ரதி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நகை மற்றும் பணம் திருடுபோன ரதியின் வீட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
கிராமங்களில் வெளிநபர்கள் சர்வ சாதாரணமாக நுழைந்து திருட்டு செயலில் ஈடுபட முடியாது. அப்படியிருக்கையில், ரதியின் வீட்டில் திருடியவர்கள் நிச்சயம் நன்கு பரீட்சையமானவர்களாகத்தான் இருக்க முடியும் என்பது உள்ளூர் வாசிகளின் கருத்தாகும்.
இந்நிலையில் கூத்தப்பாடியில் அதுவும் குடியிருப்பு மிகுந்த பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவமானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மாநகரங்களிலும் நகர்புறங்களிலும் திருடு போவது என்பது காலங்காலமாக இருந்து வருகிறது.
ஆனால், அத்தி பூத்தார்போல் அதுவும் மிகமிக மதிப்பு குறைவான சிறு சிறு திருட்டு சம்பவங்கள் மட்டுமே கிராமங்களில் இதுவரை நடந்தேறியுள்ளது. அதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, கிராமப் பஞ்சாயத்து மூலம் தீர்த்துவைக்கப்படும். அப்படி இருக்கையில், களவே போகாத கிராம புறங்களிலும் களவு போயுள்ளது என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்.
தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் இரவு நேரங்களில் வீட்டின் கதவை தாழிடாமல், திறந்துவைத்து தூங்கும் பழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.
Comments