'கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் புளிசாதம், செம்பு பாத்திரத்தில் தயாரிக்கக் கூடாது'- உணவு பாதுகாப்புத்துறை
சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான இந்து கோவில், வழிபாட்டு தளங்கள் அனைத்திலும் மத்திய அரசின் போக் (BHOG) சான்றிதழை பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிரடி காட்டியுள்ளது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பான எஃப் எஸ்.எஸ் ஏ ஐ ( fssai ) உணவு உற்பத்தி நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்த எஃப் எஸ் எஸ் ஏ ஐ அமைப்பின் சார்பாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியார் வசமுள்ள கோயில்களில் சுவாமிக்கு படைக்கும் பிரசாதம், தயாரிக்கப்படும் இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து போக் ( Blissful Hygienic Offering to God) என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரியில் நெல்லையப்பர் கோவிலுக்கும், அடுத்து பாபநாசம் சுவாமி உலகாம்பிகை கோவிலுக்கும் போக் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடிபுடையம்மன், கொடிவுடையம்மன், உட்பட பல்வேறு கோவில்களும் இந்த போக் சான்றிதழை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அறநிலையத் துறை கோவில் செயல் அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, ”உணவக கூடம், ஹோட்டல்கள், அரசு, தனியார் கேன்டீன்கள் உள்ளிட்டவற்றில் சுத்தம், உணவு தயாரிக்கும் சமையல் கூடம், சமையல் பொருட்கள், குடிநீர் பராமரிக்கும் முறை ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை முறையாக கண்காணித்து வருகிறது. இதேபோல் கோவில்களில் தெய்வங்களுக்கு படைக்கப்படும் பிரசாதங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களும் சுத்தமாக, சுகாதாரமாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகள் வந்து செல்லும் கோவில்களில் சிறு சிறு விஷயங்களில் கூட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். உதாரணமாக கோவில்களில் பக்தர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பிரசாதமாக உள்ள புளிசாதம் செம்பு பாத்திரத்தில் தயாரிக்கவோ, வழங்கவோ கூடாது. ஏனெனில் , செம்பு பாத்திரத்திலுள்ள அமிலம் உணவில் கலந்து நஞ்சாக மாறிவிடும் அபாயமுள்ளது. எனவே, உணவு பாதுகாப்புத்துறையின் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில், உணவு பாதிகாப்பு சட்டம் பிரிவு 55 ன் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்று கூறினார்.
தங்களது கோவிலுக்கு போக் சான்றிதழ் பெற விரும்புகிறோம் என்ற ஒப்புதல் விண்ணப்பத்தை கூட்டத்தில் கலந்து கொண்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வழங்கினர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே அந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மற்றவர்கள் விண்ணப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல், மாவட்ட ஆட்சியரிடம் பொதுப்படையாக பேசமுடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தமிழகத்தில் உள்ள அத்தனை கோவில்களையுமே ஆய்வு செய்து, இந்த போக் சான்றிதழை வழங்க வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments