’ஜகமே தந்திரம்’ - ஓடிடியில் வெளியிட போஸ்டர் ஒட்டி தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு!
'ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட வேண்டாம்’ எனத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்
கொரோனா நோய் பரவல் காரணமாக, சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், ஜெயம் ரவியின் பூமி உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளிவந்தன. இந்த வரிசையில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்துக்கு அமேசான் பிரைம் நல்ல விலை கொடுப்பதாகக் கூறியிருப்பதாகவும், அதனால் அமேசான் பிரைமில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின. தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு தனுஷூம் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ’என் ரசிகர்களைப் போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் ஜகமே தந்திரம் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றன. ’ஜகமே தந்திரம் திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களுக்கு பிடித்தமான நடிகரின் திரைப்படம் வெளிவரும் சூழலில் போஸ்டர் ஒட்டிய காலம் போய், தற்போது திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என போஸ்டர் ஓட்டுமளவிற்கு சூழ்நிலை மாறியுள்ளதாக சினிமா ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments