பின்னணி பில்டப்பால் மாஸ்டர் தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு..! ஆடியோ வெளியீடு பரிதாபம்
மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது, கலை நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட தெறி மற்றும் விக்ரம் வேதா படங்களின் இசையை அனுமதி பெறாமல் பயன்படுத்திய புகாரின் பேரில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நீண்டநேரம் பேசிய எக்ஸ்.பி. பிலிம் கிரியேட்டர் நிறுவன அதிபரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவை மறந்திருக்க வாய்ப்பில்லை.
விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் சிறுவர் நடனக் குழுவினரும், நடிகை சிம்ரனும், நடன இயக்குனர் சாண்டியும் தனித் தனியாக திறமை காட்டிய நடனம் தற்போது மாஸ்டர் சேவியர் பிரிட்டோவுக்கு வினையாக மாறி இருக்கின்றது..!
இந்த நடனத்தில் விஜய் படத்தில் இருந்தும் விஜய் சேதுபதி நடித்த படத்தில் இருந்தும் பாடல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பி குத்தாட்டம் போட்டனர். இதில் இடம் பெற்ற சில பாடல்களின் உரிமை திங்க் மியூசிக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது.
தங்களிடம் காப்புரிமை உள்ள பாடல்களை தங்கள் அனுமதியில்லாமல் வருமான நோக்கமுள்ள பொது நிகழ்ச்சியில் பயன்படுத்தியதோடு, இது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பபட்ட நோட்டீசுக்கும் உரிய பதில் அளிக்கவில்லை என்று, மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி. பிலிம் கிரியேட்டர்ஸ் மீது திங்க் மியூசிக் சார்பில் நோவக்ஸ் கம்யூனிகேசன் சாமிநாதன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகார் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டனர், காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி நீதிமன்றத்தை நாடிய நோவாக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மாதம் 12 ந்தேதி வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது நீதிமன்றம். அதன் பின்னரும் போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை
மாஸ்டர் படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த பின்னர் நோவாக்ஸ் நிறுவனத்தின் புகாரின் பேரில் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி .பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மீது அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பிரிவு சிபி சிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூடுதல் வருமானத்திற்காக ஒரு படத்தின் பாடல் காட்சி, இசைத் தட்டு என அனைத்து உரிமைகளையும் தனித்தனியாக பிரித்து விற்று காசு பார்த்து விட்டு, பின்னர் குறிப்பிட்ட நாயகர்கள் நடித்த பாடல்காட்சி என்ற அடிப்படையில் முறையான அனுமதி பெறாமல் பொது வெளியில் லாப நோக்கில் பாடல்களை ஒளிபரப்பினால் இது போன்ற சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதற்கு சான்றாக நடந்துள்ளது இந்த சம்பவம்..!
அதே நேரத்தில் மாஸ்டர் படத்தின் வெளியீடு எப்படி தள்ளிப்போனதோ, அதே போல இந்த புகார் தொடர்பான விசாரணையும் போலீசாரால் மாதக்கணக்கில் தள்ளிப்போய், இறுதியில் புதிதாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments