தூண்டிவிடப்படும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசு குற்றச்சாட்டு

0 3081
தூண்டிவிடப்படும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசு குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்களால் அதிலுள்ள ஒரு குறையைக் கூடச் சுட்டிக் காட்ட முடியவில்லை என நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு மாநில விவசாயிகள் மட்டுமே போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்திவில்லை எனக் குறிப்பிட்டார். குறிப்பிட்ட ஒரு மாநில விவசாயிகளே போராடுவதாகவும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்திற்கு என்றே இந்தப் போராட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேளாண் சட்டங்களில் என்ன குறைகள் உள்ளன என்று யாரும் சுட்டிக்காட்ட மறுப்பதாகக் கூறிய தோமர், வெறுமனே சட்டங்களை ரத்து செய்ய மட்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் நலனைக் காக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாகக்வும், விவசாய மண்டிகள் முறை தொடரும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் விளைபொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும் என உறுதி அளித்தார்.

தற்போதைய வேளாண் சட்டங்களை கருப்பு சட்டங்கள் என்று எதிர்க்கட்சிகள் வர்ணிப்பதாகக் கூறிய மத்திய அமைச்சர், வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதால், அவற்றில் குறை இருப்பதாக அர்த்தம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, தோமர் மாநிலங்களவையில் அளித்த தகவல்களை மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அமைச்சர் விரிவாக விளக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் அமைச்சரின் உரையை மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, தோமர் பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments