காதலை மறைத்த கவர்மெண்ட் சம்பளம்... காதலியை எரித்துக் கொலை செய்த இளைஞர்
சென்னையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், வீடு புகுந்து தீ வைத்ததில் காதலி, காதலன் , மற்றும் காதலியின் தாயார் என 3 பேர் பலியாகிவிட்டனர்.
சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கட்டம்மா.இவருக்கு ரஜிதா என்ற மகள் உண்டு. வெங்கட்டம்மாவின் கணவர் சென்னை மாநாகராட்சியில் வேலை பார்த்த போது மரணமடைந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்( வயது 31) என்பவரும் ரஜிதாவும் 7 வருடம் காதலித்து வந்துள்ளனர். ரஜிதாவுக்கு சதீஷ் தாலி கட்டி கணவன் - மனைவி போல வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தந்தை இறந்து போனதால், மகள் ரஜிதாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது. தண்டயார்பேட்டடையிலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். அரசு வேலை கிடைத்ததும் ரஜிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சதீஷை உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ,மயிலாப்பூரைச் சேர்ந்த மாநகராட்சியில் பணி புரியும் இளைஞருடன் ஜனவரி 17 - ஆம் தேதி ரஜிதாவுக்கு நிச்சயமாகியுள்ளது. இந்த விஷயம் தெரிந்ததும் சதீஷ் கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். ரஜிதாவுட ன் சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. மயிலாப்பூர் மாப்பிள்ளையை கல்யாணம் கட்டப் போவதாகவும் ரஜிதா கூறியதாக தெரிகிறது. இதனால், காதலி மீது ஆத்திரத்தில் இருந்த சதீஷ் இன்று அதிகாலை 3 மணியளவில் ரஜிதாவின் வீட்டின் மேல் இருந்த ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் குதித்துள்ளார். பின்னர், காதலி ரஜிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அதைத்தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மாவுக்கும் தீ வைக்க வீடே பற்றி எரிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டுக்குள்ளேயே 3 பேருமே கருகி பலியாகியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் தீ விபத்து என்று கருதி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆர்.கே. நகர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீட்டில் தாய் , மகள் மட்டுமே வசித்த நிலையில் மூன்றவதாக உடல் கருகி கிடந்தவர் யார் என்று விசாரித்த போதுதான், அது சதீஷ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, ஆர்கே நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
ஐம்பது அறுபத்தி ஒன்பது ஆனதை ஏன் உச்சநீதிமன்றம் தடை செய்யவில்லை. இதனால் பலருக்கு பாதிப்பு உள்ளது. சட்ட ரீதியாக இது சரி என்றால் அதை நீக்குங்கள்.