உயிருக்கு போராடும் தம்பி.. உயிரை காக்கும் அண்ணன்..! 14 வருட பாசபோராட்டம்

0 15474
உயிருக்கு போராடும் தம்பி.. உயிரை காக்கும் அண்ணன்..! 14 வருட பாசபோராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அருகே கைகால்கள் செயல் இழந்து படுத்த படுக்கையான தனது தம்பியை 14 வருடங்களாக வெண்டிலேட்டர் சிகிச்சைக் கொடுத்து அருகில் இருந்து பத்திரமாய் பார்த்து வருகிறார் அண்ணன் ஒருவர். சிகிச்சைக்காக சொத்துக்களை இழந்து சொந்தங்களை பிரிந்து தவித்தாலும், தன்னம்பிக்கை அளித்த சமூகத்தின் உதவியால் தம்பியை கவனிக்கும் பாசமலர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் பாறசாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் விபின் என்பவர் தான் சொத்து சுகங்களை எல்லாம் விற்று தனது தம்பி லிஜோவுக்கு வெண்டிலேட்டர் வைத்து கவனித்து வருகின்றார்

லிஜோவுக்கு 19 வயதாக இருக்கும் போது, 14 வருடங்களுக்கு முன்பு, பி.டெக் படிப்பில் சேரும் முனைப்பில் இருந்த லிஜோவை தாக்கிய வைரஸ் காய்ச்சல் தீவிரமான நிலையில் இரு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் ஒரு கட்டத்தில் லிஜோவின் கைகால்கள் செயல் இழந்து விட்டதாக கூறப்படுகின்றது. கடுமையான மூச்சுத்திணறல் காரணாமாக ஒன்றரை வருடம் வரை மருத்துவமனையிலேயே வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர் தற்போது வரை படுத்தபடுக்கையாக அப்படியே சிகிச்சை தொடர்வதாக வேதனை தெரிவிக்கிறார் விபின்..!

ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மூன்றரை ஆண்டு காலம் லிஜோவுக்கு ஐசியூவில் வைத்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதால் கடனாளியானார் விபின். அதன் பின்னரும் தனது தம்பியை கைவிடாமல், சொந்த வீட்டை விற்று சொந்துக்களை விற்று, தம்பிக்காக பலரிடமும் கையேந்தி கடன் வாங்கி மிகவும் சிரமத்திற்கு இடையிலும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கிறார் விபின்

தன் அண்ணன் இருக்கும் வரை தன்னை ஒரு போதும் கைவிட மாட்டான் என்று தம்பி லிஜோ நம்பிக்கையுடன் இருந்ததால் அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான் என்று தம்பியை உடனிருந்து பரிவுடன் கவனித்து வருகின்றார் விபின்.

ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு பணமின்றி குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த போது பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் தேவையான உதவிகளை வழங்கி ஒருபோதும் தன்னம்பிக்கையை இழந்து விடாமல் இருக்க வழிகாட்டியதாக தெரிவிக்கின்றார் விபின்

தம்பியின் குரல் கேட்டால் தான் எங்கிருந்தாலும் விரைந்து வர வேண்டும் என்பதற்காக அவரது குரல் எட்டும் வகையில் மைக் ஒன்றை வைத்து வீடு முழுவதும் ஸ்பீக்கர் இணைப்பு கொடுத்து வைத்துள்ளார் விபின். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மன நோயாளியாகிவிட்ட நிலையில் தனது மகன் மற்றும் மகளை 6 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க இயலாமல் கையறு நிலையுடன் தவித்து வரும் விபினை சந்தித்தால் எங்கே செலவுக்கு பணம் கேட்டுவிடுவாரோ என்று அஞ்சி சொந்தக்காரர்கள் எவரும் பார்க்காமலும், பேசாமலும் விலகிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வளவு வேதனையிலும் தனது தம்பியை குழந்தை போல பார்த்துக் கொள்ளும் விபினின் நல்ல உள்ளத்தை அறிந்த மனித உரிமை ஆர்வலரான ஸ்ரீஜேஷ் என்பவர் அவர்களுக்கு உதவுவதற்காக முதல் அமைச்சர் பினராயி விஜயனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சொத்துக்காக அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பிகளுக்கு மத்தியில் தம்பியையே தனது சொத்தாக நினைத்து போற்றி பாதுகாக்கும் விபின், என்றைக்கும் வாசம் மாறா பாசமலர் என்றால் மிகையாகாது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments