ஊட்டி என்றாலே பியூட்டிதான் : மீண்டும் தொடங்கியது படகு சவாரி!

0 6689

ஊட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது இயற்கை சூழ்ந்த அழகியல்தான். அதுவும் தமிழக மலைப் பிரதேசங்களின் ராணியாக திகழ்கிறது ஊட்டி. 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கிவரும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு ஆகியன இயக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இயற்கை அழகை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. பொதுவாகவே ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்துசெல்வதுண்டு

அதிலும் அங்குள்ள அழகியல் தொடர்பான கண்கொள்ளாக் காட்சியானது, அளவிட முடியாத வகையில் நிறைந்துக் கிடக்கின்றன. மனதுக்குப் புத்துணர்வு தரும் வண்ணவண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்டுகளிக்க கோடி கண்கள் இருந்தாலும் பத்தாது.  அதிலும் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வரும் ஊட்டி மலர் கண்காட்சி உலகப் புகழ்பெற்றதாகும்.

மேலும் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதியில் பறவைகள் அதிகளவில் காணப்படும் பகுதியாக சிம்ஸ் பூங்கா விளங்குகிறது. இங்கு  பல்லாயிரமாண்டு பழமையான செடிகள், கொடிகள், மரங்கள் ஆகியன அதிகமாக உள்ளன. அதிலும் மருத்துவக் குணம்கொண்ட மூலிகை செடிகள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் சிம்ஸ் பூங்காவிலுள்ள படகு இல்லம் மிகவும் பிரபலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோர் படகு சவாரி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவர்.

ஆயினும், கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 10மாதங்களுக்கும் மேலாக குன்னூர் சிம்ஸ் பூங்கா மூடப்பட்டிருந்தது. அதனால் படகு சவாரியும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அரசு அறிவித்த தளர்வுக்குப் பின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட படகு இல்லங்கள் செயல்படத் தொடங்கின. ஆயினும்,  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் மட்டும் பராமரிப்பு பணிக்காக படகு சவாரி இயக்கப்படாமல் இருந்தது,  அதனால் அப்பூங்காவே வெறுமையோடு காட்சியளித்தது.

இந்நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படகு  சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அங்கு படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் அங்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அப்படகு இல்லத்தில் மொத்தம் ஒன்பது படகுகள் உள்ளன. அவற்றில் தற்போதைக்கு நான்கு படகுகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆயினும், படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை இனி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்றாற்போல், மீதமுள்ள ஐந்து படகுகளும் விரைவில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உட்டி என்றாலே பியூட்டிதான். ஆகையால், உட்டியின் உல்லாசப் பயணத்துக்கு நாமும் தயாராவோம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments