15 ஆண்டுகளாக சேவை; உறவின்றி உணவின்றி தவிப்போருக்கு வயிறார உணவு!- அர்ச்சகருக்கு தேடி வந்த டாக்டர் பட்டம்

0 40176

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார் என்றும், 'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்' என்றும் அன்னதானத்தின் சிறப்பை பற்றி நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி உறவில்லாமல், உணவில்லாமல் தவித்துவருவோருக்கு கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து உணவளித்து வருகின்றனர் வேலூரை சேர்ந்த ஒரு தம்பதி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், புவனேஸ்வரி பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் பாபுசிவம் - ராதிகா தம்பதி. பாபுசிவம் அதேப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதி  சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், உணவின்றி, அவதியுறும் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கடந்த  15 ஆண்டுகளாக தேடி தேடி உணவளித்து வருகின்றனர்.  வீட்டில் தினமும் பார்த்து பார்த்து சமைத்து, அதனை பொட்டலங்களில் கட்டி, இருசக்கர வாகனத்திலேயே சென்று பேருந்து நிலையம், கோவில், போன்ற இடங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி பசியாற்றி வருகின்றனர். 

மேலும் சிலர் பிறந்தநாள், திருமணநாள், முன்னோர் நினைவு நாள் போன்ற நாட்களில், உணவு வழங்குவதற்காக இவர்களுக்கு பண உதவி செய்தும் வருகின்றனர்.  கொரோனா  ஊரடங்கு நேரத்தில் பாபுசிவம் - ராதிகா தம்பதியினர் இயன்றவரை மற்றவர்களுக்கு உணவு அளித்து வந்தனர். கொரோனா காலத்திலும் அதற்கு பயந்து தங்கள் சேவையை நிறுத்தி விடவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம், மதுரை சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் இந்த தம்பதிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. 

பணம், பொருள் என்று எதிலுமே போதும் என்ற திருப்தி அடையாத மனிதன், சாப்பாட்டில் மட்டுமே வயிறு நிறைந்தால் போதும் என்று திருப்தி அடைகிறான். போதும் என்ற சொல்லே அன்னதானம் செய்பவர்களுக்கு பொதுமான செல்வத்தை கொடுக்கும், என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அப்படி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வயிறார உணவளித்து வரும் இவர்களுக்கு, போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு, செல்வம் பெருகட்டும் என்று, பலரும் இத்தம்பதியை பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments