96 பேர் அடங்கிய மருத்துவக்குழு ;23 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை! விபத்தால் முடங்கியவருக்கு மறு வாழ்க்கை

0 2064

கார் விபத்தில் பயங்கரமாக காயமடைந்த அமெரிக்க இளைஞர் ஒருவருக்கு உலகிலேயே முதன்முறையாக இரண்டு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச்  சேர்ந்த 22 வயது இளைஞர் ஜோ டிமியோ. கடந்த 2018ம் ஆண்டு வேலை முடிந்து வீட்டிற்கு வாகனம் ஓட்டிக் கொண்டு வரும்போது சிறிது நேர கண் அயர்ச்சியால் அவரது கார் கவிழ்ந்து வெடித்தது. இதில் அவரது விரல்கள் துண்டானதுடன், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உதடுகள், கண் இமைகள் உட்பட உடலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் முழுமையாக எரிந்து விட்டன.

அதனைத் தொடர்ந்து நான்கு மாதங்கள் நியூஜெர்சியில் உள்ள NYU லங்கோன் மருத்துவ மையத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் ஜோ டிமியோ சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கோமாவில் இருந்தார்.

இந்த நிலையில் . ஜோ டிமியோவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 மணி நேரம் முக மாற்று-கைகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்த சாதனையை முகம் மாற்றுத் திட்டத்தின் இயக்குநர் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் 96 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் செய்து முடித்தனர்.

இது குறித்து ஜோ டிமியோ கூறுகையில், சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் கிடைப்பதை போல சிகிச்சையின் முடிவிலும் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பியதாகவும், வெற்றிகரமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் தனக்கு இப்போது மறு  வாழ்க்கை கிடைத்ததாகவும், குறிப்பிட்டார். "ஜோ டிமியோ சிகிச்சைக்கு முழு நம்பிக்கையுடன் ஒத்துழைப்பு கொடுத்ததால் இது சாத்தியமானது” என்று முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக்ஸ் கூறினார்.

ஒரே நேரத்தில் இரண்டு கைகள் மற்றும் முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது உலகில் இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments