தாமதமாக வந்த அதிகாரிகள்; ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் லாரியிலேயே இறந்த 6 லட்சம் மீன் குஞ்சுகள்!
விழுப்புரம் மாவட்டம் பெரியஏரியில் மீன்குஞ்சுகளை விட அதிகாரிகள் தாமதமாக வந்ததால் சுமார் 20 லட்சம் மதிப்பிலான 6 லட்சம் மீன் குஞ்சுகள் இறந்த சம்பவம் வளவனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொதுப்பணித்துறை மூலம் மீன்வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் பொது ஏலம் விடப்பட்டு வருகின்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 43 ஏரிகளில் மீன் குஞ்சுகள் கடந்த டிசம்பர் மாதம் பொதுப்பணித்துறை சார்பில் பொது ஏலம் விடப்பட்டது. அதனை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்ததையடுத்து மீன் குஞ்சுகள் ஏரியில் விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை வளவனூர் பெரிய ஏரியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 6 லட்சம் கட்லா, ஜிலேப்பி, கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட 4 லாரிகளில் அதிகாலை 5 மணிக்கு கொண்டு வரப்பட்டன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் மீன் குஞ்சுகள் விடப்பட வேண்டும் என்பதால் அதிகாலையிலிருந்து தனியார் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அதிகாரிகள் வராததாலும், ஆக்சிஜன் தீர்ந்து போனதாலும் அவர்கள் கொண்டு வந்த பல மீன்கள் லாரியிலேரயே இறந்துவிட்டன.
மதியம் 12 மணியளவில் அங்கு வந்த சில அதிகாரிகள் மீதமுள்ள மீன்களை ஏரியில் விட கூறினர். அதனையடுத்து அந்த மீன்கள் வளவனூர் பெரிய ஏரியில் விடப்பட்டது. ஆனால் , தாமதமாக விடப்பட்ட காரணத்தினால் அந்த மீன்களும் ஏரியில் செத்து மிதந்தன. இதனால் இறந்த மீன்கள் அனைத்தும் ஏரிக்கரையில் கொட்டப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் அள்ளி சென்றனர்.
Comments