எமனுடன் 7 மணி நேரம்... நான் செத்து பிழைச்சவன்டா! - சிறுத்தையிடமிருந்து தப்பிய நாய்

0 454744

கர்நாடகத்தில் சிறுத்தையுடன் கழிவறையில்   சிக்கிய தெருநாய் 7 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 

தக்ஷின கர்நாடக மாவட்டத்திலுள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணியளவில் சிறுத்தை ஒன்று தெரு நாயை விரட்டி வந்துள்ளது.சிறுத்தையிடமிருந்து தப்பிக்க நாய் ஒரு வீட்டை ஒட்டியிருந்த கழிவறைக்குள் புகுந்தது. ஆனாலும், விரட்டி சென்ற சிறுத்தை கழிவறைக்குள் புகுந்தது. இந்த சமயத்தில் கழிவறைக்குள் வந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே சிறுத்தையின் வால் தெரிந்ததை பார்த்து சுதாரித்துக் கொண்டார். உடனடியாக, கழிவறையின் கதவை அடைத்து விட்டு கூச்சல் போட்டார். தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தனர். முதலில் , கழிவறையின் மேல் கூரை அகற்றப்பட்டு சுற்றிலும் வலை போடப்பட்டது. இதற்கிடையே, தங்களது நடவடிக்கையால் சிறுத்தை கோபமடைந்து நாயை அடித்து சாப்பிட்டு விடும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கழிவறைக்குள் மாட்டிக் கொண்டதால் சிறுத்தையும் பயந்து போய் இருந்தது.

இதனால், நாயை தாக்க சிறுத்தை முனையவில்லை. கழிவறையின் ஒரு மூலையில் நாயும் மற்றோரு பகுதியில் சிறுத்தையும் படுத்துக் கொண்டிருந்தன. பின்னர், ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் மீதேறி வனத்துறை அதிகாரிகள் மதியம் 2 மணியளவில் சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டனர். அந்த தருணத்தில் துள்ளிய சிறுத்தை வலையில் மாட்டிக் கொண்டது. பிறகு, அதை மீட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டில் விட்டனர். நாய் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. சிறுத்தையுடன் ஒரே அறையில் 7 மணி நேரம் இருந்த நாய்க்கு நான் செத்து பிழைச்சவன்டா என்ற பாடல் வரிகள் நிச்சயமாக பொருந்தும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments