“அய்யோ, அம்மா விட்டுடுங்க” கதறும் இளைஞர் - கட்டிவைத்து அடித்த கும்பல்
தஞ்சை அருகே வீடு புகுந்து பணம் திருடியதாகக் கூறி இளைஞர் ஒருவரின் கண்களைக் கட்டி ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கும் அதிரவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வலி பொறுக்க முடியாத அந்த இளைஞர், விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் 22 வயதான ராகுல். ராகுலின் கண்களைக் கட்டி, இரண்டு கைகளையும் இருவர் பிடித்துக்கொள்ள மரத்தில் சாய்த்து, அவரது பின்புறத்தில் கம்பால் ஒருவன் சரமாரியாகத் தாக்குகிறான்.
வலியால் துடிதுடித்து தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சும் ராகுலை இடைவெளியின்றி தாக்குகிறான் அந்த இளைஞன்.
ஒரு கட்டத்தில் மயங்கிச் சரியும் ராகுலின் கழுத்துப் பகுதியில் ஒருவன் உட்கார்ந்துகொள்ள, கம்பைக் கொண்டு அவரது பாதத்தில் தாக்குகிறான் அந்த கொடூர இளைஞன். காண்போர் நெஞ்சில் பதைபதைப்பை ஏற்படுத்தும் இந்தக் காட்சிகளை அந்த கும்பலில் இருந்த ஒரு நபர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதலங்களில் பதிவேற்றியுள்ளான்.
தாக்குதல் நடத்திய கும்பல் அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடும் கும்பல் என்றும் அவர்களிடம் கூலித் தொழிலாளியாக ராகுல் வேலை செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. மணல் திருட்டுக் கும்பலின் வீடு புகுந்து 30 ஆயிரம் ரூபாயை ராகுல் திருடியதாகக் கூறியே அவரை அந்த கும்பல் தாக்கியதாக ராகுலின் சகோதரர் கூறுகிறார்.
இதனிடையே கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகிய ராகுல் வலி தாங்காமல் எலி மருந்தை உண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடூர கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments