விஜய்யிடம் நியாயம் கேட்கும் அ.இ.த.வி.ம.இ தொண்டர்கள்..! அனாதையாகிவிட்டதாக உருக்கம்

0 21055
விஜய்யிடம் நியாயம் கேட்கும் அ.இ.த.வி.ம.இ தொண்டர்கள்..! அனாதையாகிவிட்டதாக உருக்கம்

எஸ்.ஏ.சந்திர சேகரனை நம்பி வீதிக்கு வந்த அ.இ.த.வி.ம.இ அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் தாங்கள் அனாதையாகிவிட்டதாக தெரிவித்து நடிகர் விஜய்க்கு வீடியோ அனுப்பி உள்ளனர். வில்லுப்படம் பார்க்க அனுமதிக்காத கணவரை கண்டித்து தீக்குளித்த பெண் முதல், டிக்கெட்டுக்காக கிடைத்த பிரம்படியால் விலா எலும்பு நொறுங்கியவர் வரை விடுத்த உருக்கமாக வேண்டுகோள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

அ.இ.த.வி.ம.இ என்ற கட்சியை தொடங்க போவதாக அறிவித்து குடும்பத்திற்குள் குழப்ப குண்டு வைத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய்யின் வீட்டை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரனின் ஆதரவாளராக செயல்பட்டதால் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து புஸ்ஸி ஆனந்தால் நீக்கப்பட்ட 42 நிர்வாகிகள் கன்னியாகுமரியில் ஒன்று கூடி விஜய் மக்கள் இயக்கத்தில் தற்போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றஞ்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அ.இ.த.வி.ம.இ கட்சியின் தலைவராக எஸ்.ஏ.சியால் அறிவிக்கப்பட்ட திருச்சி ராஜா, கடந்த 25 ஆண்டுகளாக உழைத்த தான் அனாதையாக்கப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்தார்.

வில்லு படம் பார்க்க டிக்கெட் எடுத்து தராத கணவரை கண்டித்து தீக்குளித்ததால் அ.இ.த.வி.ம.இ அமைப்பில் பொறுப்பு பெற்று தற்போது நீக்கப்பட்ட சென்னையை சேர்ந்த தேவி என்பவரும் தனக்கு நியாயம் வேண்டும் என முறையிட்டார்

பேஸ்புக், டுவிட்டரில் வேகம் காட்டும் 19 வயது பசங்களை எல்லாம் புதிதாக நிர்வாகிகளாக போட்டு விட்டு, 24 வருடமாக விஜய்யை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்க்க நிகழ்ச்சி செய்த தங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை ஒதுக்கியது ஏன் என்று புதுக்கோட்டை நிர்வாகி கேள்வி எழுப்பினார்

விஜய்க்கு முதன் முதலாக சிலை வைத்ததால் பதவி பறிபோனதாக வேதனை தெரிவித்த ராணிபேட்டை நிர்வாகி, ரசிகர் காட்சி மூலம் லட்சக்கணக்கில் வசூல் செய்த விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகி ஒருவர் 80 லட்சம் ரூபாய் வரை பணத்தை சுருட்டிக் கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.

விஜய்க்காக விலா எலும்பு நோக அடிவாங்கியதாக சட்டையை கழற்றி வேதனை தெரிவித்தார் இளம் நிர்வாகி ஒருவர்

கேரளாவில் இருந்து வந்த முன்னாள் நிர்வாகியின் தாய் ஒருவர், தனது மகன் விஜய்க்காக உயிரை விட்டதாக கதறிய நிலையில் , தற்போது தாங்கள் அனாதையாக நிற்பதாக தெரிவித்த உயிரிழந்த நிர்வாகியின் சகோதரி, தாங்கள் விஜய்யை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்

வேலூரில் தூய்மை பணியாளராக பணியாற்றிவந்த முன்னாள் நிர்வாகி ஒருவர் நகரில் உள்ள குப்பைகளை நான் அகற்றுகிறேன், மக்கள் இயக்கத்தில் உள்ள குப்பைகளை எப்போது அகற்ற போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்..!

நடிகர் விஜய்யின் பேனரை பார்த்து தங்கள் உள்ளத்தின் குமுறல்களை கொட்டித்தீர்த்த அ.இ.த.வி.ம.இ அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் 42 பேரும் தங்களுக்கு ஆளுக்கு 2 நிமிடம் நேரம் ஒதுக்கி நல்ல தீர்வு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதன் வீடியோ காட்சிகளையும் விஜய்க்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்பது போல அ.இ.த.வி.ம.இ கட்சி தொடங்க நினைத்த நேரம் எஸ்.ஏ.சி மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களையும் பொறுப்பை பறி கொடுத்து வீதியில் நிறுத்தியுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments