உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அடி : கிருஷ்ணகிரியில் பதட்டம்!
கிருஷ்ணகிரி பகுதியில் நடைபெற்ற எருது விடும் போட்டியில் மாடு முட்டி காயமடைந்தவரை பாதுகாப்பதற்காக, உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸ் டிரைவரை அப்பகுதியிலுள்ள மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தை மாதம் முழுவதும் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா, மஞ்சு விரட்டு போன்ற வீரவிளையாட்டுகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த வரட்டனப்பள்ளியில் 53ஆம் ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வரட்டனப்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, சிந்தகம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டது.
இன்று நடைபெற்ற எருதுவிடும் விழாவில் சுமார் 2000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களில் பலரும் போட்டியில் கலந்துகொண்ட மாடுகளை உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
பரப்பரப்பான மக்கள் கூட்டத்துக்கு நடுவே எருது விடும் விழா களைகட்ட தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற மாடுகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டது. மாடுகளும் உற்சாகத்தில் துள்ளல் போட்டு ஆர்ப்பரித்தன.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வேளையில், போட்டியில் பங்கேற்ற மாடு ஒன்று அப்பகுதியிலுள்ள இளைஞர் ஒருவரை வயிற்றுப் பகுதியில் முட்டி தள்ளியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவசர சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அங்கிருந்த இளைஞர்கள் சிலர், 108 ஆம்பலன்சுக்கு போன் செய்தனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது, இதனையடுத்து, அங்கு சற்று பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த இளைஞரை காவல்துறையின் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு சற்று தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் அடித்து தாக்கினர். அந்த திடீர் தாக்குதலில் என்னசெய்வதென்று தெரியாமல் தத்தளித்த நிலையில் இருந்த ஓட்டுநரை காவல்துறையினர் வந்து பாதுகாத்து, பத்திரமாக அனுப்பி வைத்தனர். இல்லையென்றால், ஓட்டுநரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போயிருக்கும்.
ஆம்புலன்ஸ் தாமதாக வந்தது வருத்தத்துக்கு உரியதுதான் ; அதேவேளையில், மாடு முட்டி படுகாயமடைந்த இளைஞரின் உயிரைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது வரவேற்கக் கூடிய ஒன்றுதான். அதற்காக, உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அடித்து தாக்குவது தவறான முன் உதாரணமாகும்.
ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். ஒரு உயிரை காப்பாற்றுவது முக்கியம்தான். அதுக்காக இன்னொரு உயிரை இழந்துவிடக் கூடாது. இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவரின் உயிருக்கு ஏதாவது நேரிட்டால், அது வன்முறைக்குத்தான் வழிவகுக்கும்.
இனியாவது வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதை உணர்ந்து இளைஞர்கள் செயல்படவேண்டும்.
ஏனெனில், பல்வேறு விபத்துக்களால் உயிருக்குப் போராடும் எத்தனையோ பேரின் உயிர்களை மீட்டெடுப்பதற்காக வாகனத்தின் வேகத்தை அதிகரித்து, தங்கள் உயிரை பணயம்வைப்பவர்கள்தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். அவர்களின் உயிரும் நமக்கு முக்கியம்தான்.
Comments