தங்க நாக்குடன் புதைக்கப்பட்ட 2000 வருட பழைய மம்மி...என்னவா இருக்கும்?!
எகிப்து நாட்டில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கு கொண்ட மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது .
எகிப்து நாட்டின் , அலெக்சாண்ட்ரியா பகுதியில் உள்ள டபோசிரிஸ் மேக்னா கோயிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2000 வருடப் பழமையான தங்க நாக்கு கொண்ட மம்மி கண்டெடுக்கப்பட்டது. எகிப்து மற்றும் டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தின் பழம்பெரும் கோயில்களில் கடந்த 10 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 16 புதையிடங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த புதையிடங்களில் பல மம்மிகள் புதைந்திருந்தன. மார்பில் அணிகலன்கள் மற்றும் தலையில் கொம்புகள் வைத்த கிரீடத்தினாலும், மம்மிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை சரியான முறையில் பதப்படுத்தப்படவில்லை.
அதில் ஒரு மம்மியின் வாயில் தங்க நாக்கு இருந்ததைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்தனர். எகிப்து நாட்டு மக்கள் உயிரிழந்தபின் ஒசிரிஸ் என்ற எகிப்து கடவுளுடன் உரையாடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஒசிரிஸ், எகிப்து நாட்டின் பாதாள உலகின் ஆட்சியாளர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்தபின்னும் ஒசிரிஸுடன் எகிப்து மக்கள் பேசுவார்கள் என்பது அந்நாட்டு முன்னோர்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின்படி, இந்த மம்மிக்கு சொந்த நாக்கு அகற்றப்பட்டு இம்மாதிரியான தங்க நாக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், முந்தைய கிரேக்க மற்றும் ரோமானிய காலங்களில் இறுதி சடங்களில் பயன்படுத்தப்பட்ட பெண்களுக்கான முகமூடி, தங்க மாலை போன்றவையும் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன. முன்னதாக டபோசிரிஸ் மேக்னா கோயிலில் ஏழாம் கிளியோபாட்ரா ராணியின் முக வடிவமும் பெயர் பொறித்த நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments