அலங்காநல்லூர் : ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உறுதி.... விழா கமிட்டியின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது வருவாய் கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்றது. இதில் 12 காளைகளை பிடித்து முதல் பரிசு பெற்ற கண்ணன் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையில், காலை 8.45 மணியளவில் போட்டி தொடங்கியுள்ளது. அப்போது எண் ’33’ கொண்ட பனியனை அணிந்து களம் இறங்கிய ஹரிகிருஷ்ணன் என்பவர், 9.25 மணி வரை களத்தில் விளையாடி உள்ளார். அதுவரை அவர் காளைகளை அடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் எந்தவித முன்பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யாமல் பிறவாடி என சொல்லப்படும் வாடிவாசல் வழியாக வந்த கண்ணன் என்பவர், ஹரிகிருஷ்ணனின் 33வது எண் கொண்ட பனியனை மாற்றிக் கொண்டு, 9.30 முதல் 9.45 மணிக்குள் 2 காளைகளை அடக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்தடுத்து சுற்றுகளில் விளையாடிய கண்ணன் மொத்தம் 12 காளைகளை அடக்கியுள்ளது வீடியோ பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசு தொடர்பாக ஹரிகிருஷ்ணன் மற்றும் கண்ணன் இருவரும், மாவட்ட நிர்வாகமும், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என வாக்குமூலம் அளித்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனைதொடர்ந்து, முதல் பரிசு வழங்குவது தொடர்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டி பரிசீலனை செய்து முடிவினை தெரிவிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments