போலி ஆற்று மணல்’ தயாரிக்கும் தொழிற்சாலை ... 5 பேர் அதிரடி கைது!
சேலம் அருகே போலி மணல் தயாரிப்பில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக அசலுக்கு நிகராக அனைத்து பொருட்களிலும் போலிகள் வந்துவிட்டன. போலிகள் சூழ் உலகாக மாறிவருவதால் அனுதினமும் பலவித ஆபத்துக்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் போலி மணல் தயாரிக்கும் பணி அதிகளவில் நடைப்பெற்றுவருகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்பது மிகவும் ஆபத்தானது என்பதை உணராத சிலர் இது போன்ற வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சட்ட விரோதமாக போலி மணல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆத்தூர் மற்றும் தலைவாசல் போலீசார், தாசில்தார் அன்புச்செழியன் தலைமையில்,. மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அருகே உள்ள ஏரியில் இருந்து மண்னை கடத்திக் கொண்டு வந்து சுத்திகரித்து, அதனை லாரிகள் மூலம் கட்டிடங்கள் , பாலங்கள், சாலை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரரிடம் விற்கப்படுவது கண்டுபிடிக்கபட்டது.
இவ்வகையான மணல் பசைத்தன்மை இல்லாமல் இருப்பதால், இவற்றின் மூலம் கட்டப்படும் கட்டுமான பணிகளின் உறுதித்தன்மை கேள்விக்குறியே. இதனைதொடர்ந்து மணல் தயாரிக்க பயன்படுத்தப்படும் எந்திரம், 60 டன் மணல், ஜே.சி.பி. எந்திரம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.,பின்னர் தமிழரசன், சதீஷ்குமார், ஷாஜகான், பிரபு, பிரபாகரன் ஆகியோர் 5 பேர் மீதும் தமிழ்நாடு கனிமவளங்களை திருடுதல் , மணல் கொள்ளை, சட்டவிரோதமாக ஆலை நிறுவியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலியாக மணல் தயாரித்து விற்பனை செய்து வந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments