பாகனை கொன்ற தெய்வானை யானை... மன அழுத்தத்தை குறைக்க புதிய ஏற்பாடு!
முருகனின் ஆறுபடை வீடுகளில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்த கோயிலில் தெய்வானை என்ற கோயில் யானை வளர்க்கப்பட்டுவந்தது .
சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு சுட்டித்தனமாகக் கோயிலைச் சுற்றிவந்த தெய்வானை, கடந்த வருடம் மே மாதம் திடீரென ஆவேசமடைந்தது. கோபமடைந்த தெய்வானை அருகிலிருந்த பாகனைத் துதிக்கையால் தூக்கி வீசியது. சுவரில் மோதி படுகாயமடைந்த பாகன், பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து, தெய்வானைக்குப் பலமுறை மதம் பிடித்ததால் , கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.இதைத் தொடர்ந்து, தெய்வானைக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. தெய்வானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபின், யானையின் உடல்நிலையிலும் மனநிலையிலும் முன்னேற்றம் காணப்பட்டது. இயல்பு நிலைக்குத் திரும்பிய தெய்வானையை, மற்ற கோயில்களில் வேலைபார்த்து வந்த பாகன்கள் பராமரித்து வந்தனர்.
தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, திருச்சி எம் . ஆர் பாளையத்திலுள்ள யானைகள் முகாமுக்கு தெய்வானை கொண்டுசெல்லப்பட்டது. கடந்த 8 மாதங்களாக, தெய்வானைக்குப் பல பயிற்சிகள் திருச்சி முகாமில் வழங்கப்பட்டது.
தெய்வானை தனியாக இருந்தால் , மன அழுத்தம் ஏற்படலாம் என்று கூறிய மருத்துவர்கள், ஒரு துணையுடன் இருந்தால், யானை புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்று ஆலோசனை வழங்கினர்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி ,தெய்வானையை மதுரை அழைத்து வந்த திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தினர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானையான பார்வதியுடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தனது புது தோழி பார்வதியுடன் , உற்சாகமாக விளையாடி வருகிறது தெய்வானை .
Comments