கோயம்பேடு மார்க்கெட் குடோன் ஏலத்தில் ரூ 17 கோடிகள் இழப்பு..! அதிகாரிகள் மீது புகார்

0 4552
கோயம்பேடு மார்க்கெட் குடோன் ஏலத்தில் ரூ 17 கோடிகள் இழப்பு..! அதிகாரிகள் மீது புகார்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் குடோன் ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் விடுவதில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 28 கோடி ரூபாய்க்கு கேட்கப்பட்ட டெண்டரைத் தள்ளுபடி செய்து விட்டு, புதிய விதியை வகுத்து அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவருக்கு 10 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை மக்களின் காய்கறித் தேவையை பூத்தி செய்கின்ற மாபெரும் சந்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்..!

செடியில் இருந்து பறித்து 10 நாட்களான வெண்டைக்காய்களைப் போல இங்கு வரும் விவசாயிகள் வாடிச் சென்றாலும், இங்குள்ள வியாபாரிகள் எப்போதும் முப்போகம் விளையும் வயல் போல செழிப்பாக உள்ளனர் என்பதற்கு அண்மையில் நடைபெற்ற குடோன் ஒதுக்கீட்டிற்காக ஏலத்தில் புரண்ட பல கோடிகளே சான்று..!

அந்த வகையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட வெற்றுக் குடோன் ஒன்றிற்கான ஏலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பலரும் மிரட்டப்பட்ட நிலையில், இறுதியில் சில காய்கறி வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றதாகக் கூறப்படுகின்றது.

அதிக பட்சமாக குபேரன் அண்ட் கம்பெனி 28 கோடி ரூபாய்க்கும், அரவிந்த் பிரபு என்பவர் 27 கோடி ரூபாய்க்கும், ஜீவா என்ற பெண்மணி 26 கோடி ரூபாய்க்கும், விஸ்வநாதன் என்பவர் 19 கோடி ரூபாய்க்கும், டான் போஸ்கோ என்பவர் 15 கோடி ரூபாய்க்கும், சின்னத்துரை என்பவர் 10 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் கேட்டிருந்தனர்.

பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் ஏலத்தை நடத்திய சி.எம்.டி.ஏ கண்காணிப்பு பொறியாளர் பெரியசாமி, 3 விதிகளை சுட்டிக்காட்டி அதிக விலைக்கு கேட்டவர்களின் டெண்டர் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விட்டு, குறைந்த விலைக்கு கேட்ட சின்னத்துரைக்கு குடோனை ஒதுக்கீடு செய்வதாக கூறியதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

விண்ணப்பதாரர்கள் 3 வருட வருமானவரி கட்டிய சான்றிதழை ஒப்படைக்க வேண்டும், வியாபாரம் செய்த முன்அனுபவம் இருக்க வேண்டும் என்பது வரை சரி, விண்ணப்பதாரருக்கு சொந்தமாக வேறு கடைகள் இருக்கக் கூடாது என்று கூறி இருப்பது முழுக்க முழுக்க சின்னத்துரைக்காகவே உருவாக்கப்பட்ட விதிமுறை என்று வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சொந்தமாக காய்கறிக் கடை வைத்திருப்பவர்களுக்கு தானே காய்கறி குடோன் தேவைப்படும், கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தக்கடை கூட வாங்க இயலாமல் வாடகை கடையில் சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சின்னத்துரைக்கு 10 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்று கேள்வி எழுப்பும் வியாபாரிகள், சின்னதுரைக்கு சாதகமாக டெண்டர் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு 17 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் சின்னதுரை ரவுடிகளை வைத்து மிரட்டி ஏராளமானோரை டெண்டரில் பங்கேற்க விடாமல் தடுத்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சின்னதுரை, தான் பல வருடங்களாக வாடகைக் கடையில் காய்கறி வியாபாரம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து 10 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு குடோனை ஏலம் எடுத்ததாக விளக்கம் அளித்தார்

அரசுக்கு வர வேண்டிய வருமானத்தில் கோடிக்கணக்கில் இழப்பீட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரி பெரியசாமியோ, கோயம்பேடு மார்க்கெட் குடோன் விதிகளுக்கு உட்பட்டே ஏலம் விடப்பட்டதாகவும் மற்ற விண்ணப்பங்கள் அதிக தொகைக்கு கேட்கப்பட்டு இருந்தாலும், விதிகளை காரணம் காட்டி அவை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

டெண்டர் விடுவதன் நோக்கமே அதிக தொகை கேட்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசின் வருவாயை பெருக்க வேண்டும் என்பது தான், ஆனால் அதனை கைவிட்டு குறைந்த விலைக்கு டெண்டர் கைமாறிய பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து வியாபாரிகளின் எதிர்பார்ப்பு..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments